தென் மாகாணத்தின் முதலாவது “கிராமத்துடன் உரையாடல்” நிகழ்ச்சி இன்று (13) காலி மாவட்டத்தில் உள்ள ஹிக்கடுவ பிரதேச செயலக பிரிவில் நடைபெறும்.
இது இந்த நிகழ்ச்சித் தொடரின் 14 வது நிகழ்ச்சியாகும்.
காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும் “கிராமத்துடன் உரையாடல்” நிகழ்ச்சிக்காக கலகொட கிழக்கு கிராம அதிகாரி பிரிவில் உள்ள ஜனபத கனிஷ்ட வித்தியாலயம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அமைச்சுக்களின் செயலாளர்கள், பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்வார்கள்.
ஜனாதிபதி தனது “சுபீட்சத்தின் நோக்கு“ கொள்கைத் திட்டத்தில் ஒரு பயனுறுதிவாய்ந்த குடிமகன், மகிழ்ச்சியான குடும்பம், நல்லொழுக்கமுள்ள, நியாயமான சமூகம் மற்றும் வளமான நாடு என்ற நான்கு இலக்குகளை வெற்றிகொள்ளும் உறுதிமொழியை மக்களிடம் முன்வைத்தார்.
இந்த பரந்த நோக்கத்தை அடைவதற்கு, இலங்கையின் மக்கள் தொகையில் சுமார் 70% ஆக உள்ள கிராமப்புற மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் சரியாக அடையாளம் காணப்பட்டு அவசரமாக தீர்க்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி எதிர்பார்க்கிறார்.
கிராமப்புற மக்கள் நீண்ட காலமாக பல்வேறு பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் “கிராமத்துடன் உரையாடல்” திட்டத்தின் இறுதி குறிக்கோள், ஜனாதிபதி தானே கிராமங்களுக்குச் சென்று, மக்களின் பிரச்சினைகளை நேரடியாக கேட்டறிந்து, விரைவாக கிராமங்களை அபிவிருத்தி செய்வதாகும்.
“கிராமத்துடன் உரையாடலில்” அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகளில் பெரும்பாலானவை கிராம மக்களின் யோசனைகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் அரசாங்க அதிகாரிகளின் உதவியுடன் உடனடியாக தீர்க்கப்படுகின்றன. தீர்க்க காலம் செல்லும் சிக்கல்கள் பின்னர் தீர்க்கப்படுவதற்கு குறித்துக்கொள்ளப்படுகின்றன. பிரச்சினையின் அனைத்து அம்சங்களையும் வெவ்வேறு கோணங்களில் புரிந்துகொள்வதன் மூலம் ஒரு பிரச்சினையை எளிதாகவும் விரைவாகவும் தீர்க்க முடியும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
“கிராமத்துடன் உரையாடல்” திட்டம் 2020 செப்டம்பர் 25 அன்று பதுளை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. மாத்தளை, இரத்தினபுரி, அனுராதபுரம், அம்பாறை , பொலன்னறுவை, களுத்துறை, மொனராகலை, கேகாலை, கண்டி, புத்தளம், திருகோணமலை மற்றும் குருணாகல் மாவட்டங்களை உள்ளடக்கி கடந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
இன்று ´கிராமத்துடன் உரையாடல்´ நிகழ்ச்சிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள ஹிக்கடுவ பிரதேச செயலக பிரிவு ரத்கம பிரதேச சபை பிரிவின் கீழ் வரும் கலபொட கிழக்கு கிராம அதிகாரி பிரிவு அம்பலங்கொட நகரத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இப்பிரதேசத்தின் பரப்பளவு 444 ஏக்கர் ஆகும். 1072 குடும்பங்களைச் சேர்ந்த 3711 பேர் இங்கு வாழ்கின்றனர்.
மீன்பிடி, விவசாயம், கறுவா மற்றும் தும்புக் கயிறு கைத்தொழில்கள் இப்பிரதேச மக்களின் முக்கிய வாழ்வாதாரமாகும். கலபொட மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன.
சுனாமி பேரழிவுக்குப் பின்னர் மீள்குடியேற்றப்பட்டவர்களின் காணிப் பிரச்சினைகள், போதைப்பொருள் மற்றும் ஏனைய சட்டவிரோத கடத்தல், பாரம்பரிய கல் உடைக்கும் தொழிலுக்கு உள்ள தடைகள், குடிநீர் பற்றாக்குறை, மீன்பிடி துறைமுகம் சார்ந்த சிக்கல்கள் மற்றும் சுகாதார, கல்வி ஊழியர்களின் பற்றாக்குறை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் போதாமை இவற்றில் முக்கியமானவையாகும்.