தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் (திருகோணமலைக்கு கிழக்கே 370 கி.மீ) ஆழமான காற்றழுத்த தாழமுக்கம் ´மாண்டூஸ்´ சூறாவளியாக குவிந்து வலுவடைந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதை தொடர்ந்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி. முகம்மட் றியாஸ் தெரிவித்தார்.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாளமுக்கம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாளமுக்கம் காரணமாக கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்வதுடன் மாவட்டத்தின் சில இடங்களில் மழைவீழ்ச்சியுடன் அதிகளவான காற்றும் பனிமூட்டமும் காணப்படுகின்றது.
கட்டடங்கள் இடிந்து விழும் அபாயங்கள்
அம்பாறை மாவட்டத்தில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 – 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதனால் பாரிய மரங்கள் பழயை கட்டடங்கள் இடிந்து விழும் அபாயங்கள் ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இது தவிர ´மாண்டூஸ்´ சூறாவளியின் தாக்கத்தின் கீழ் அம்பாறை மாவட்ட கடற்கரையின் ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் மிக பலத்த காற்று மற்றும் பலத்த மழையுடன் மிகவும் கரடுமுரடான அலைகள் உயரமாக எழுகின்றன.
காங்கேசன்துறையில் இருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சுமார் 2.5 மீற்றர் முதல் 3.5 மீற்றர் வரையான அலைகள் வீசக்கூடும்.
எனவே, மேற்கூறிய ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகளுக்கு மறு அறிவித்தல் வரும்வரை கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் செல்ல வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
கடற்பரப்புகள் கொந்தளிப்பு
காங்கேசன்துறையில் இருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகவும் உயர்வாகவும் காணப்படும்.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும் எனவும், இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால கணிப்புகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அவர் பொதுமக்களை கேட்டுகொண்டுள்ளார்.