தமிழ்த்திரையுலகில் நகைச்சுவைக்கு பல ஆண் நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் பெண்கள் தரப்பில் அப்படியான நடிகைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆச்சி என அனைவராலும் அன்பொழுக அழைக்கப்பட்ட மனோரமாவுக்கு பின்பு கோவை சரளா மட்டும்தான் நினைவில் தங்குகிறார்.
காமெடி நடிகையாலும் கமல் போன்ற பெரிய நடிகருக்கு ஜோடியாக நடிக்க முடியும் என நிரூபித்தவர் நடிகை கோவை சரளா. 1983ல் பாக்கியராஜின் முந்தானை முடிச்சு திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார் கோவை சரளா. கரகாட்டக்காரன் திரைப்படம் கோவை சரளாவுக்கு வேற லெவல் பெயரை வாங்கிக் கொடுத்தது. இதேபோல் வைகைப்புயல் வடிவேலுவுடன் சேர்ந்து இவர் நடித்த காமெடிகள் எல்லாம் மெகா ஹிட் அடித்தது.
லேடி காமெடி கிங்கான கோவை சரளா இதுவரை 750க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். 2008க்கு பின்பு அவருக்கு வாய்ப்பு இல்லாமல் போனது. 2013ல் காஞ்சனா படம் மூலம் மீண்டும் வாய்ப்பை பெற்று சீனுக்கு வந்து செகண்ட் இன்னிங்ஸ் நின்று ஆடுகிறார் கோவை சரளா.தன் உடன்பிறந்த நான்கு சகோதிரிகள், ஒரு சகோதரனுக்கு திருமணம் செய்துவைத்த கோவை சரளா அவர்மட்டும் இன்னும் கல்யாணம் செய்துகொள்ளவில்லை. பல ஏழைக்குழந்தைகளை படிக்கவைக்கும் கோவை சரளா, தன் உடன்பிறந்தவர்களின் பிள்ளைகளையே தன் பிள்ளைகளாக பாவித்துவருகிறார். முதியோர் இல்லங்களுக்கும் அடிக்கடி போய் உதவிசெய்கிறார் கோவை சரளா.