நாமக்கல்லில் இளைய மகன் திருமணமான பெண்ணை காதலித்து இழுத்து சென்றதால், அவமானம் தாங்க முடியாமல் மூத்த மகனுடன் தந்தை தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் களங்காணி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (55), 25 வயதான சங்கர் மற்றும் 21 வயதான கிருஷ்ணன் ஆகிய இரண்டு மகன்களுடன் வசித்துவந்தார்.
அவர்கள் மூவரும் அருகில் உள்ள செங்கல் சூளையில் வேலைபார்த்து வந்துள்ளனர். அதில் இளையமகன் கிருஷ்ணன் ஜேசிபி வாகன ஓட்டுநராக இருந்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக கிருஷ்ணனுக்கும் சேலம் மாவட்டம் கொல்லாம்பட்டியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மனைவி சத்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில், அவர்கள் இருவரும் சேர்ந்து தலைமறைவாகிவிட்டனர்.
அதனைத் தொடர்ந்து, சத்யாவின் கணவர் பாஸ்கர் மனைவியைக் கண்டுபிடித்துக் கொடுக்குமாறு முத்துக்காப்பட்டி பொலிஸில் புகார் அளித்துள்ளார்.
அதனையடுத்து, கிருஷ்ணனின் தந்தை சுப்பிரமணி மற்றும் அண்ணன் சங்கர் ஆகிய இருவரையும் போலீஸ் பிடித்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், இளையமகன் செய்த காரியத்தை அவமானமாக கருதிய சுப்பிரமணி, மூத்த மகன் சங்கருடன் அவர்கள் வேலை பார்த்துவந்த செங்கல் சூளை அருகிலுள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
அவர்களது உடலைக் கைப்பற்றிய பொலிஸ், அவர்களது தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.