தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டு யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நல்லூர் கந்தசுவாமி ஆலய சுற்றாடலில் உள்ள தியாகி திலீபனின் நினைவு தூபி முன்பாக ஈகைச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று பிற்பகல் இடம்பெற்றிருந்தது. இதன்போது சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸர் நினைவேந்தலை தடுக்கும் நடவடிக்கையினை எடுத்திருந்தனர்.
இதன்போது நீதிமன்ற தடை உத்தரவு உள்ளதா என கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் நீதிமன்ற தடை உத்தரவு இல்லாமல் இறந்தவர்களை நினைவு கூரும் தமக்குரிய உரித்தை தடுக்க முடியாது என சுட்டிக்காட்டியிருந்தார்.
எனினும் தியாகி திலீபனின் நினைவேந்தலை தடுக்கும் வகையில் நடந்து கொண்ட பொலிஸார் நினைவேந்தலில் பங்குபற்றியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட சிலரை கைது செய்து பொலிஸ் வாகனத்தில் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.