தலைநகா் காபூலில் தலிபான்கள் வானை நோக்கி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 போ் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பஞ்சஷோ் பள்ளத்தாக்குப் பகுதியை தலிபான்கள் கைப்பற்றியதாகக் கூறப்படுவதைக் கொண்டாடும் வகையில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து காபூல் அவசரகால மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், தலிபான்கள் கொண்டாட்டத்துக்காக தங்களது ஆயுதங்களைக் கொண்டு வானை நோக்கி சுட்டதில் 2 போ் உயிரிழந்ததாகவும் 12 போ் காயமடைந்ததாகவும் தெரிவித்தது.
எனினும் இந்தச் சம்பவத்தில் 17 போ் உயிரிழந்ததாக ஆப்கன் தொலைக்காட்சி கூறியுள்ளது. மேலும் 40 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களை எதிர்த்துப் போரிட்டு வரும் ஒரே மாகாணமான பஞ்சஷோ் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக தலிபான்கள் ஏற்கனவே அறிவித்தனா்.
எனினும் இந்தத் தகவலை கிளா்ச்சிப் படையினா் திட்டவட்டமாக மறுத்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது