அரசமைப்பின் 21 வது திருத்தத்தில் இரட்டை குடியுரிமையுடையவர் அரசியலில் செல்வாக்கு செலுத்துவதில் தடை விதிக்கப்படாவிடின் நாட்டில் மீண்டும் அரசியல் நெருக்கடி தீவிரமடையும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ஸவின் விருப்பத்துக்கு அமையவே அரசாங்கம் முக்கிய தீர்மானங்களை முன்னெடுக்கிறதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இது குறித்து பேராசிரியர் மேலும் கூறுகையில்,
நாட்டில் பொருளாதார நெருக்கடியும், அரசியல் நெருக்கடியும் தீவிரமடைவதற்கு, முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஸ பொறுப்பு கூற வேண்டும் என்பதில் யாருக்கும் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது. முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்தின் தன்னிச்சயான தீர்மானங்களின் காரணமாக நாட்டில் அரசியல் நெருக்கடியும் தீவிரமடைந்தது.
பொது ஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் மக்களுக்கு முரணாகச் செயற்பட்ட கூட்டணியிலிருந்து 11 அரசியல் கட்சிகளும் வெளியேறி நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுகிறோம்.
இந்நிலையில் சர்வகட்சிகளையும் ஒன்றிணைத்து இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் யோசனைக்கு பிரதான எதிர் கட்சிகள் இணக்கம் தெரிவிக்காத காரணத்தால் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதிய அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமாயின் அரசியல் ஸ்திரத்தன்மை பேணப்பட வேண்டும் என்பதால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க தீர்மானித்தோம். இந்நிலையில் நிபந்தனையற்ற எமது ஆதரவை அரசாங்கம் தவறான முறையில் பயன்படுத்திக்கொள்ள கூடாது.
அரசமைப்பின் 20 ஆவது திருத்தம் முழுமையாக இரத்து செய்யப்பட்டு 19 ஆவது திருத்தம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்திய பேராசிரியர் திஸ்ஸ விதாரண, 21 ஆவது திருத்தம் விரைவாக செயற்படுத்தவேண்டும் என்ற பொதுக் கோரிக்கையை அரசாங்கத்திடம் முன் வைத்துள்ளதாகவும் கூறினார்.
அதில் இரட்டை குடியுரிமையுடையவர் அரசியலில் செல்வாக்கு செலுத்த அரசமைப்பில் 20 ஆவது திருத்தத்தில் வழங்கப்பட்டுள்ள வரப்பிரசாதம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்பது எமது பிரதான கோரிக்கையாக உள்ளத்துடன் மக்களின் பிரதான எதிர்ப்பாகவும் உள்ளது. 21 ஆவது திருத்தத்தில் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படாவிடின் நாட்டில் மீண்டும் அரசியல் நெருக்கடி தீவிரமடையும் என்பதைத் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்.
இவ்வாறான நிலையில் பசில்ராஜ பக்ஸவின் விருப்பதற்கமையவே தற்போதைய அரசாங்கத்தில் முக்கிய தீர்மானங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை கவலைக்குரியது எனவும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.