புதிய ஆண்டில் அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பேசப்பட்டு வரும் நிலையில், அமைச்சரவை மாற்றத்தின் போது, கமத்தொழில் அமைச்சை தனது மூத்த சகோதரர் சமல் ராஜபக்சவுக்கு (Chamal Rajapaksa) வழங்க ஜனாதிபதி எதிர்பார்த்து இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமல் ராஜபக்சவின் தலைமையின் கீழ் “ உழவு இலங்கை பயிர் செய்கை போர்” திட்டத்தை விரிவுப்படுத்துவது ஜனாதிபதியின் இலக்கு.
இந்த திட்டத்தின் கீழ் பயிர் செய்யப்படாத காணிகளை அடையாளம் கண்டு, அவற்றில் விசேட பயிர் செய்கை வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு காணி அமைச்சுக்கு ஆலோசனை வழங்குவது ஜனாதிபதியின் திட்டமாக இருந்தது.
எனினும் கமத்தொழில் அமைச்சை பெற்றுக்கொள்ள முடியாது என சமல் ராஜபக்ச மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கமத்தொழில் அமைச்சராக மகிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage)பதவி வகித்து வருகின்றார். சேதனப் பசளை பயிர் செய்கை திட்டம் ஊடாக ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக அவர் விவசாயிகளின் கடும் விமர்சனங்களுக்கு மட்டுமல்லாது எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளார்.
சமல் ராஜபக்ச நீர்பாசன அமைச்சராகவும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சராக பதவி வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.