தமிழ்நாட்டில் திருச்சி மத்திய சிறைச்சாலைக்குள் உள்ள அகதி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 29 இலங்கைத் தமிழர்கள் கடந்த மாதம் பாரிய தற்கொலை முயற்சியொன்றை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகமான அல்-ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
அதற்கமைய தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மத்திய சிறைச்சாலைக்குள் அமைக்கப்பட்டுள்ள அகதி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 17 இலங்கைத் தமிழர்கள் கடந்த ஒகஸ்ட் 18 ஆம் திகதி பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அந்த சம்பவம் இடம்பெற்ற இரண்டு தினங்களின் பின்னர் மேலும் 12 இலங்கைத் தமிழர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், குறித்த இரண்டு தற்கொலை முயற்சிகளிலும் எந்தவொரு இலங்கைத் தமிழரும் உயிரிழக்கவில்லை என்றும் அல்-ஜசீரா ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
தாம் போலியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தம்மை விடுதலை செய்யுமாறும், குறித்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 80 இலங்கைத் தமிழர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அல்-ஜசீரா குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகள் தாம் இலங்கைக்கு நாடு கடத்தப்படும் அச்சுறுத்தலின் கீழ் வாழ்வதாகவும், நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும், தெரிவித்துள்ளதாக, அல்-ஜசீரா மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.