இலங்கையில் இருந்து இந்தியாவில் புலம்பெயர்ந்து வாழுகின்ற எமது மக்களின் நலனுக்காக தமிழ்நாடு முதல்வர் பெருந்தொகை நிதியை ஒதுக்கீடு செய்துள்ள விடயத்திற்கு நாங்கள் மிகவும் சந்தோசம் அடைகின்றோம். அவருக்கு எமது வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகளின் மீள் வருகை தொடர்பில் அமைச்சர் நாமல் ராஜபக்ச கூறிய கருத்து வேடிக்கையானது என்றும் ஏனெனில் இந்த அரசாங்கத்திடம் எமது மக்களை மீள அழைத்து குடியமர்த்த வேண்டும் என்ற திட்டங்கள் எதுவுமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
இந்தியாவில் வசிக்கும் இலங்கையர்கள் நலனுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 317 கோடி நிதிய ஒதுக்கீடு மேற்கொண்டுள்ளமை தொடர்பிலும் புலம்பெயர் உறவுகளின் மீள்வருகை தொடர்பில் அமைச்சர் நாமல் ராஜபக்ச வெளியிட்ட அறிக்கை தொடர்பிலும் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் யுத்தம் காரணமாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு இந்த நாட்டில் வாழ முடியாமல் இந்தியாவிற்குச் சென்று அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் எமது உறவுகளுகளின் நலனுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பாரிய நிதியினை ஒதுக்கீடு செய்துள்ள விடயம் உண்மையிலேயே வரவேற்கத்தக்கதும், மகிழ்ச்சிகரமானதுமாகும்.
எமது தொப்புல்கொடி உறவுகளாக இந்தியா இருந்துகொண்டு இந்த நாட்டில் தமிழர்கள் தொடர்பான விடயத்தில் கூடுதலான கவனம் எடுத்து எமது மக்களின் இருப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று பல முன்னெடுப்புகளைச் செய்திருக்கின்றது. இருப்பினும் இந்த அரசாங்கத்தால் அது முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாமல் இருக்கின்றது. குறிப்பாக 13வது திருத்தச் சட்டம் கூட இந்திய இலங்கை ஒப்பந்தம் என்ற அடிப்படையில் இருப்பதன் காரணமாகத் தான் இன்று அந்தச் சட்டத்தில் கை வைப்பதில் இந்த அரசாங்கம் தயக்கம் காட்டுகின்றது.
குறிப்பாக இந்த அரசாங்கத்தில் இருக்கின்ற பெரும்பாலான அமைச்சர்கள் இந்தியாவின் அனுசரணையுடன் கொண்டு வரப்பட்ட இந்த மாகாணசபை முறைமையை இல்லாமல் செய்வதற்குரிய பணிகளை முன்னெடுத்து வருகின்றார்கள். மாகாணசபை முறைமை பொருத்தமற்றது என்ற கருத்துகளைக் கூட அவர்கள் முன்வத்திருக்கின்றார்கள். இவ்வாறு அவர்கள் முன்வைக்கின்ற ஒவ்வொரு விடயங்களும் இலங்கையில் இருக்கின்ற தமிழர்களையும், தமிழர்களின் பலத்தையும் இல்லாமல் செய்வதற்கான நிகழ்ச்சி நிரலாகவே தோணுகின்றது.
அந்த அடிப்படையில் இலங்கையில் இருந்து இந்தியாவில் புலம்பெயர்ந்து அகதிகளாக வாழுகின்ற எமது மக்களின் நலனுக்காக தமிழநாடு முதல்வர் பெருந்தொகை நிதியை ஒதுக்கீடு செய்துள்ள விடயத்திற்கு நாங்கள் மிகவும் சந்தோசம் அடைகின்றோம். அவருக்கு எமது வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றோம்.
அதே நேரம் இந்த நாட்டிலே தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சரக இருக்கின்ற நாமல் ராஜபக்ச அவர்கள் யுத்தத்தினால் இந்த நாட்டை விட்டுச் சென்றவர்கள் மீள இங்கு வருகின்ற போது அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வோம் என்ற கருத்தைத் தெரிவித்திருக்கின்றார். உண்மையில் அவருடை கருத்தானது ஒரு வேடிக்கையான கருத்தாகவே இருக்கின்றது.
தேர்தல் காலங்களில் இவரால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் பலவுண்டு. அதில் கவரப்பட்டு எமது இளைஞர்கள் பலரும் அவரின் பின்னால் பயணித்திருந்தார்கள். அவ்வாறு முன்வைத்த வாக்குறுதிகளே இன்னும் நிறைவேற்றப்படாத ஒரு நிலைமையிலே வெளிநாடுகளில் அகதிகளாக இருக்கும் எமது மக்களின் பாதுகாப்பு சம்மந்தமாக கருத்துகளை அவர் கூறியிருப்பது உண்மையிலேயே ஏற்றுக்கொள்ளப்பட முடியாத விடயம்.
ஏனெனில் இந்த நாட்டிலே இருந்து அகதிகளாக இந்தியாவிற்குச் சென்ற எமது மக்களை யுத்தம் முடிந்து பன்னிரண்டு வருடங்களிலே அவர்களை மீளக் குடியமர்த்துவதற்கான ஏதாவதொரு பணியை இந்த அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றதா. மீள நாட்டுக்கு வந்தவர்களுக்கான அடிப்படை வசதிகளே இன்னும் செய்து கொடுக்கப்படவில்லை.
இலங்கைக்கு மீள வருபவர்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் பூர்த்தி செய்து தரப்படவில்லை, இங்கு வந்தவர்களை மேலும் அடிமையாக்குகின்ற விடயத்தையே அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. மீள இலங்கைக்கு வரவேண்டாம் என்ற கருத்துக்களை இந்தியாவில் உள்ள மக்களுக்கு இங்கு மீள வந்தவர்கள் தெரியப்படுத்தியிருக்கின்றார்கள்.
இதன் நிமித்தம் நாங்கள் அந்த மக்களுடன் கலந்துரையாடும் போது இந்தியாவில் நாங்கள் பாதுகாப்பாக இருக்கின்றோம். இலங்கைக்கு நாங்கள் மீள வந்தால் அந்தப் பாதுகாப்பினை அரசங்கத்தினால் ஏற்படுத்தித் தர முடியுமா என்ற கேள்வியையே அவர்கள் எங்களிடம் முன்வைக்கின்றார்கள்.
அந்த மக்கள் கோரும் பாதுகாப்பு இங்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறியே. ஏனெனில் பாதுகாப்பு இல்லாத காரணத்தினாலேயே அவர்கள் இந்தியாவிற்குச் சென்றிருந்தார்கள். அவர்கள் இங்கு மீள வருகின்ற போது அவர்கள் அவர்களின் இடங்களில் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும், அவர்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும், அத்துடன் அவர்களின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட விடயத்திலும் இந்த அரசாங்கம் பூரணமான உறுதிமொழியை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காமல் வெறுமனே அவர்களை இங்கு அழைக்கின்ற விடயம் ஏற்புடையதாக இருக்காது.
தற்போதைய இந்த அரசாங்கம் இலங்கையில் தமிழர்களின் விகிதாசாரத்தைக் குறைக்க வேண்டும் என்கின்ற நிகழ்ச்சி நிரலை அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றது. அதன் நிமித்தம் எமது மக்கள் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள நிலைமைகளும் இருக்கின்றன. இது இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளின் விளைவே.
எனவே அமைச்சர் நாமலின் கருத்து மக்களைக் கவருவதற்காகக் கூறப்பட்ட ஒன்றாக இருக்கின்றதே தவிர ஆக்கபூர்வமான கருத்தாகப் பார்க்க முடியாது. ஏனெனில் இந்த அரசாங்கத்திடம் எமது மக்களை மீள அழைத்து குடியமர்த்த வேண்டும் என்ற திட்டங்கள் எதுவுமில்லை. தூய நோக்கத்தோடு செயற்படுகின்ற அரசாங்கமாகவும் இது இல்லை என்று தெரிவித்தார்.