அமைச்சர் டக்ளஸ் வாயினால் மாத்திரமே அமைச்சருக்கான வேலையினை செய்கின்றார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
தனது பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஊடாக வாழைச்சேனையில் வாழ்வாதார உதவிகளை வழங்கியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “தமிழக மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகள் காரணமாக வட பகுதி மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வட பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் முழுமையாக அழிவடைந்து வருகின்றது.
இதற்குரிய காரணம் எங்களது மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வாயினால் மாத்திரமே அமைச்சருக்கான வேலையினை செய்கின்றார். அவருடைய வேலையினை அவர் பார்ப்பது இல்லை.
கடந்த ஒரு வருடமாக நான் அவரிடம் முன்வைத்த எந்த கோரிக்கையினையும் அவர் நிறைவேற்றவில்லை. பாராளுமன்றத்தில் அதை செய்கின்றேன். இதை செய்கிறேன் என தெரிவிப்பார். ஆனால் இதுவரை இந்திய மீனவர்களை தடுக்க முடியாத நிலையில் உள்ளார்.
உண்மையிலேயே இந்த அரசாங்கம் புத்திசாலித்தனமான அரசாங்கம். தமிழர் ஒருவரினை மீன்பிடி அமைச்சராக நியமித்து, தமிழகத்தில் உள்ள தமிழர்களையும் இலங்கையிலுள்ள தமிழர்களையும் மோதவிட்டு சிரித்து கொண்டு இருகின்றது. இதனை அமைச்சர் முதலில் உணர வேண்டும்.
அப்படி செய்ய முடியாவிட்டால் பதவியினை இராஜினாமா செய்ய வேண்டும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.