தமிழர்களுக்கு மீண்டும் ஒரு முறை சாவு மணி அடித்துள்ள ரணில் விக்கிரமசிங்க.!!!
“தமிழ் மக்களின் தலையில் சம்பல் அரைக்கின்ற” நிகழ்வைத் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் மிகச் சாதுரியமாக முன்னெடுத்து வருவதை யாவரும் அறிந்த ஒன்றே.
காலாதி காலமாக ஒன்றித்துச் செல்லாத தமிழ் தலைமைகள் தற்போதும், ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி தனித் தனியே பிரிந்து செல்வதையே காலம் காட்டி நிற்கிறது.
“வைத்தால் பிள்ளையார், வழித்து எறிந்தால் சாணி” என்ற நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இன்றைய நிலை காணப்படுகின்றது.
விடுதலைப் புலிகளால் உத்தியோகர்பூவமாக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கட்சி எனும் மமதையில் செயற்பட்டவர்கள்,தற்போது வழித்து எறிந்த சாணியின் நிலையாகிப் போயுள்ளனர்.
இவ்வாறான செயற்பாடுகள் தென்னிலங்கை அரசியலுக்கு தீனி போட்டதாகவே அமைந்துள்ளது.
இவற்றைத்தான் அவர்களும் எதிர்பார்த்தும் உள்ளனர்.
சர்வதேச சமூகத்திற்கு தமிழ் மக்கள் எப்போதும் ஒருமைப்படாதவர்கள் என்றும்,பல பிரிவாக பிரிந்தும், கருத்து மோதலிலும் வெவ்வேறான கொள்கையுடன் நிற்பதாலும், யாருடன் பேசுவது என்ற தந்திரோபாய காய் நகர்த்தலை நகர்த்தி, தாம் தப்பித்துவிடலாம் என்ற நப்பாசையில் தென்னிலங்கைச் சக்திகள் காத்திருக்கின்றன.
இந்த இடத்தில்தான் தமிழர் தரப்பின் இன்றைய நிலையை,திருவள்ளுவர் அன்றே கணித்து கற்றவர்களும் கல்லாதவர்கள் போல் நடந்துகொள்வதால் ஏற்படும் தீமை பற்றிக் கூறியுள்ளார்.
அதாவது தமிழ் தேசிய அரசியல் பிரதிநிதிகள் அதிகமானோர் சட்டத்தரணிகளாக காணப்படுகின்ற போதிலும் அவை யாவுமே பயனற்றுப்போய் கல்லாதோர் போலாகியுள்ளனர்.
இனம் சார்ந்த விடயங்களில் கவனம் கொள்ளாது “கைப் பொம்மைகளாகி” தமது சுயநல அரசியலையே முன்னெடுத்துவந்துள்ளனர்.
தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு, “குழந்தைக்குச் சோறூட்டுவது போல” மாயை ஒன்றைக் காட்டி தமது நாட்களை கடந்து வந்தவர்கள் தற்போது,அவர்களோடு பங்கம் வகித்த ஏனைய கட்சிகள் புதிதாக ஒரு தமிழ் தேசிய கட்சியை உருவாக்கியுள்ளனர்.
இந்த நிலையில்தான்,சம்மந்தன் அவர்களின் தலைமையில் ஒரு தமிழ் தேசிய கூட்டமைப்பாகவும்,ஏனைய ஐந்து கட்சிகள் இன்னுமொரு தமிழ் தேசிய கூட்டமைப்பாகவும் உருவெடுத்திருக்கும் நிலையில், தமிழ் மக்கள் எந்த கட்சியை தேசிய கட்சியாக ஏற்றுக்கொள்வதென்ற இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது.
இக் கட்சிகளின் முரண்பாட்டு நிலை இலங்கை அரசிற்கு பால் வார்த்ததைப் போலாகியுள்ளது.
இந்த இடத்தில்தான் நாட்டினுடைய ஜனாதிபதியாக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க அவர்கள், தனது நரித் தந்திரத்தை மீண்டும் ஒரு முறை தமிழர் தரப்பில் பயன்படுத்தி வெற்றிகண்டுள்ளார்.
இதே போலத்தான் விடுதலைப் புலிகளின் ஆட்சிக் காலத்தில் தனது நரித் தந்திரத்தை முறையாக பயன்படுத்தி விடுதலைப் புலிகள் தரப்பில் பிளவை ஏற்றபடுத்தி, கருணா அவர்களை பிரித்தெடுத்து தனது தந்திரத்தை வெற்றிகொண்டவர், மீண்டும் ஒரு முறை தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பை இரு கூறாக்கி தனது தந்திரத்தில் மீண்டும் ஒரு முறை வெற்றிகண்டுள்ளார்.
இவர்களின் தந்திரமான காய் நகர்த்தலுக்கு தமிழ் தேசியவாதிகளும் சோரம் போய்விட்டார்களா என்றே எண்ணத் தோன்றுகிறது.
எவை எப்படி இருப்பினும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியானது தமிழ் மக்கள் எதிர்பார்ப்பது போன்று எதையும் சாதித்துவிடப்போவதில்லை என்பதே நிதர்சனம்.
தத்தம் சுய நல கொள்கைகளுக்காக தேவைக்கேற்றால் போல் அரசியல் கபட நாடகங்களை அவ்வப்போது குறித்த கூட்டணியில் உள்ளவர்கள் நிகழ்த்தியதை கடந்த காலங்கள் காட்டிநிற்கிறது.
இது மட்டுமன்றி குறித்த ஐந்து கட்சிகளும் தமிழ் மக்களுக்காய் சொல்லுமளவிற்கு எதையும் சாதித்துவிடவில்லை. ஆக மொத்தத்தில் இக் கட்சிகள் அரசின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு பயன்படுத்தப்பட்ட கருவிகளாகவே தமிழ் மக்கள் பார்க்கின்றனர்.
தமிழர்களின் ஏகோபித்த கட்சியாக பிரகடனப்படுத்தப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உடைவானது, தமிழர்களின் அடுத்த கட்ட அரசியல் நகர்வில், பாரிய பின்னடைவை சந்திக்கப்போகிறது என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
இதற்காகவே காத்திருந்த அரசு, ஒரு கபட நாடகத்தை அரங்கேற்றி ரணில் விக்கிரமசிங்கவை பதவியமர்த்தி, சாணக்கியமான நகர்வின் ஊடாக தமிழர்களின் அரசியல் நகர்விற்கு சாவு மணி அடித்துள்ளார்கள் என்பதே உண்மை.
நான் உங்கள்,
– ஈழத்து எழுத்தாளர் வவுனியூர் ரஜீவன்.