இலங்கையில் தற்போது இடம்பெற்று வரும் மீறல்கள் தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ள பிரித்தானியப் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள், தமிழர்களுக்கான உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதை முன்னிறுத்தி தம்மால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.
தமிழர்களுக்கான பிரித்தானியாவின் அனைத்துக்கட்சிப் நாடாளுமன்றகுழுவின் ஆண்டறிக்கையில், இலங்கையில் கடந்தகாலங்களில் இடம்பெற்ற மீறல்கள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தல், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநாட்டல் என்பன தொடர்பில் பிரித்தானியப் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கொண்டிருக்கும் கடப்பாடு மீளவலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டின் அடைவுகளைப் பொறுத்தமட்டில், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆதாரங்களைத் திரட்டி, அவற்றை ஆராய்ந்து, பாதுகாத்து வைப்பதற்கும் எதிர்காலத்தில் பொருத்தமான பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்குவதற்குமான சாத்தியப்பாட்டை ஏற்படுத்தியிருக்கக்கூடிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46.1 தீர்மானம் தொடர்பில் அவ்வறிக்கையில் விசேடமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்தோடு இலங்கையில் பின்னடைவைச் சந்தித்திருக்கக்கூடிய மனித உரிமைகள் நிலைவரத்தை சீர்செய்யக்கூடியவாறான பொறிமுறையொன்றை உருவாக்குவதற்கான அழுத்தத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு வழங்குவதற்கு தாயாராக இருப்பதாகவும் தமிழர்களுக்கான பிரித்தானியாவின் அனைத்துக்கட்சிப் நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.
மேலும் ஸ்கொட்லாந்து பொலிஸாரினால் இலங்கைப்பொலிஸாருக்கு வழங்கப்பட்டுவந்த பயிற்சிகளை நிறுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தைத் தாம் பெரிதும் வரவேற்பதாகக் பிரித்தானிய அனைத்துக்கட்சிப் நாடாளுமன்றக் குழு குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமை மீறல்கள் ஏற்புடையதல்ல என்பதுடன் இராணுவத்தினரையும் பொலிஸாரையும் பயன்படுத்தி அப்பாவிப் பொதுமக்கள் மீது அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதை சர்வதேச சமூகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்ற வலுவான செய்தியை அது இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.