இந்திய மக்கள் வழங்கியுள்ள இரண்டு பில்லியன் இலங்கை ரூபாவுக்கு மேல் பெறுமதியான மனிதாபிமான உதவித் தொகையானது நாளை மறுதினம் கொழும்பை வந்தடையும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
இந்த உதவி தொகையில் முதல் கட்டமாக 9 ஆயிரம் மெற்றி தொன் அரிசி, 50 மெற்றி தொன் பால் மா மற்றும் 25 மெற்றி தொன்னுக்கும் மேற்பட்ட மருந்துகள் மற்றும் ஏனைய மருத்துவப் பொருட்கள் எனவும் அவற்றை உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 18 ஆம் திகதி சென்னை துறைமுகத்தில் இருந்து தமிழக முதல்வர் .மு.க.ஸ்டாலின் இந்த அத்தியவசிய பொருட்களை ஏற்றிய கப்பலை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
தமிழக மக்கள் சார்பில் தமிழக அரசாங்கம் 40,000 மெற்றி தொன் அரிசி, 500 மெற்றி தொன் பால் மா மற்றும் மருந்துகளை வழங்கியுள்ளது. தமிழக அரசாங்கத்தின் இந்த உதவி தொகையானது 2 பில்லியன் இலங்கை ரூபாவுக்கும் மேல் பெறுமதியானவை.
இலங்கைக்கு வந்தடையும் இந்த அத்தியவசிய உணவு பொருட்கள் இலங்கை அரசாங்கத்தால் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் மேல் மாகாணம் உட்பட நாடு முழுவதும் உள்ள பயனாளிகளுக்கு விநியோகிக்கப்படும்.
இந்த பயனாளிகள் இலங்கை சமூகத்தின் பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கியவர்கள். இதனை தவிர பல்வேறு அவசர தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்தியாவில் இருந்து பல தனியார் மற்றும் சமூக அமைப்புகள் இலங்கைக்கு உதவிகளை அனுப்பியுள்ளன.
இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து சுமார் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இந்திய அரசின் பொருளாதார உதவியாக இலங்கைக்கு வழங்கப்பட்டது. மேலும், மருந்துகள், உலர் உணவுகள் போன்றவையும் இந்திய அரசு மானிய அடிப்படையில் இலங்கைக்கு அனுப்பியுள்ளது.