தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 8-ந் தேதி புதிதாக கொரோனா பாதிப்போரின் எண்ணிக்கை 800-க்கும் கீழ் குறையத் தொடங்கியது. தொடர்ந்து குறைந்து வந்த தொற்று பாதித்தோர் எண்ணிக்கை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. தமிழகத்தில் சென்னை, கோவை, செங்கல்பட்டு, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் 66 நாட்களுக்கு பின்னர் நேற்று மீண்டும் 800-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 50 நாட்களுக்கு பின்னர் கொரோனா சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது.
மேலும் இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வரும் சூழ்நிலையில் மாநில முதல்வர்களுடன் நாளை (புதன்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக அவசர ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையின் போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், குறிப்பாக தடுப்பூசிப் பணிகளை முடுக்கிவிடுவது குறித்தும் பிரதமர் ஆலோசிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.