சர்வஜன வாக்கெடுப்பு மூலம் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள எவரும் முயற்சிக்க கூடாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் நேற்று நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
நாடே குழம்பிப்போயுள்ளது. உலக நடப்பு தெரியாதவர்கள், முன்னாள் பிரதமர் சிறிமா ஆட்சிக் காலத்தில் இவ்வாறு வரிசையில் நிற்க நேரிட்டது என கூறுகின்றனர்.
சிறிமா அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் நான் சாதொசவில் பொருட்களை விநியோகம் செய்யும் அதிகாரி. இவ்வாறான நெருக்கடி நிலை இருக்கவில்லை. வரிசையில் நின்ற மக்கள் கெட்ட வார்த்தைகளில் அரசாங்கத்தை தூற்றவில்லை.
தனியாக ஆட்சி செய்ய நினைக்க வேண்டாம். அதற்கு நல்ல அணியொன்று தேவை. ஐந்து ஆண்டுகளாக நான் தனியாக ஆட்சி செய்தவன். நாடாளுமன்றில் எனக்காக யாரும் பேசவில்லை.
ஆளும்கட்சியிலும் எதிர்க்கட்சியிலும் எனக்கு ஆதரவாக யாரும் இருக்கவில்லை. அவ்வாறான பின்னணியிலும் நாட்டை இந்தளவிற்கு பொருளாதார நெருக்கடிக்குள் இழுத்துச் செல்லவில்லை.
2015ல் அதற்கு முன்னர் இருந்ததை விட பொருட்களின் விலை குறைவாக காணப்பட்டது. எரிபொருளின் விலை 2 ரூபாவினால் உயர்த்திய போது மொட்டு கட்சியினர் சைக்கிளில் நாடாளுமன்றம் வந்து எதிர்ப்பு வெளியிட்டனர்.
இப்போது சுகமா, வெங்கயாம் எவ்வளவு, தேங்காய் எவ்வளவு என மேடைகளில் கேள்வி கேட்டார்கள். இன்று நாடே சுகவீனமுற்றுள்ளது. ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சுதந்திரக் கட்சிக்கு பெரும் மதிப்பு காணப்பட்டது.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கிய மூன்று தலைவர்களும் என்னை தனித்தனியாக சந்தித்து ஆதரவு கேட்டனர்.
சுதந்திரக் கட்சி இன்றி வெற்றிபெற முடியாது என கூறியவர்கள் தேர்தலின் பின்னர் கறிவேப்பிலை போன்று கட்சியை தூக்கி எறிந்தனர். விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படாது, முதலில் நாடாளுமன்றத் தேர்தலே நடாத்தப்படும்.
சிலர் சர்வஜன வாக்கெடுப்பு பற்றி பேசுகின்றார்கள். சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தி காலத்தை நீடித்துக் கொள்ள முயற்சிக்க வேண்டாம். அதற்கு இடமளிக்க முடியாது என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.