இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் தொலைக்காட்சி பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் தந்தைக்கு ஆதரவாக இருந்த 3 வயது குழந்தையை, பெற்ற தாய் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் நகர்பவி பகுதியில் உள்ள பிடிஏ லேஅவுட் பகுதியில் உள்ள கட்டுமானப்பணி நிறைவடையாத குடியிருப்பு ஒன்றில் கடந்த செவ்வாயன்று இரவில் இந்த துயர சம்பவம் நடைபெற்றிருக்கிறது.
அடுத்த நாள் காலையில் அந்த இடத்தில் குழந்தையின் சடலத்தை பார்த்த வழிப்போக்கர் ஒருவர் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவே இந்த அதிர்ச்சிகர தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
மல்லத்தஹள்ளி பகுதியைச் சேர்ந்த 26 வயது பெண் சுதா, இவர் நகரில் உள்ள டைல்ஸ் கடை ஒன்றில் அலுவலக பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.
அவருடைய கணவர் ஈரண்ணா தினக்கூலியாக வேலை பார்த்து வருகிறார். இவர்களின் ஒரு மகள் 3 வயதாகும் வினுதா.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று மதியம் 2 மணியளவில் ஈரண்ணா மதிய உணவுக்காக வீட்டுக்கு வந்திருக்கிறார், அப்போது அவருடைய மகள் வினுதா தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தார்.
உடனே டிவியின் ரிமோட்டை எடுத்து சேனலை மாற்றிய ஈரண்ணா, செய்திச் சேனல் ஒன்றை மாற்றியிருக்கிறார்.
எந்நேரமும் செய்தி சேனல்களை பார்ப்பதா என கோபம் கொண்ட அவருடைய மனைவி ஆத்திரம் அடைந்து கணவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
எப்போதும் செய்தி சேனல்களை மட்டுமே பார்ப்பதாக இருந்தால் வீட்டுக்கே வரவேண்டாம் எனவும் தெரிவித்திருக்கிறார்.
பெற்றோரின் சண்டையினை இடைமறித்த அவரது குழந்தை தந்தைக்கு ஆதரவாக தாயிடம் பேசியிருக்கிரார்.
அப்பாவே டிவி பார்க்கட்டும், அம்மாவிற்கு பைத்தியம் பிடித்து விட்டது என அக்குழந்தை தெரிவித்ததால் கடும் கோபமடைந்த தாய் சுதா தன்னிலை இழந்து பிஞ்சுக் குழந்தையை கொலை செய்திருக்கிறார்.
ஆனால் குழந்தையை கொலை செய்துவிட்டு எதுவும் தெரியாதது போல ஜனபாரதி காவல்நிலையத்தில் தனது மகளை காணவில்லை என புகார் கொடுத்திருக்கிறார் சுதா.
மல்லத்தஹள்ளி அருகே கடை ஒன்றில் சாட் உணவுகள் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது தனது மகள் தொலைந்து போனதாக அவர் புகார் கொடுத்திருந்தார்.
இதனிடையே குழந்தையின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர், மகளை காணவில்லை என புகார் கொடுத்த பெற்றோரை வரவழைத்து விசாரித்த போது தனது குழந்தையை ஆத்திரத்தில் கொலை செய்ததை அந்தத் தாய் ஒப்புக்கொண்டார்.
பெற்ற மகள் என்றும் பாராமல் தாயே குழந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.