நாட்டில் கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பயன்படுத்தும் தடுப்பூசிகளினால் எயிட்ஸ் நோய் பரவுவதாக பொய்யான பிரசாரம் செய்யப்படுவதாகவும், தடுப்பூசிகளினால் எய்ட்ஸ் பரவ எந்தவொரு வாய்ப்பும் இல்லை எனவும், தடுப்பூசிகள் இரத்த மாதிரிகளினால் தயாரிக்கப்படுவதில்லை எனவும் அரச மருந்தாக்கல் கூட்டுதாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேகர தெரிவித்தார்.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தடுப்பூசிகளில் எய்ட்ஸ் தொற்று ஏற்படுவதற்கான மூல காரணிகள் இருப்பதாக செய்திகள் பரவியுள்ள நிலையில் அது குறித்து வினவி போதே அவர் இதனை கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட தடுப்பூசிகளில் எய்ட்ஸ் பரவுவதற்காக வாய்ப்புகள் இருப்பதாக கூறுவதை முழுமையாக நிராகரிக்கிறோம். அதேபோல் வேறு நோய்க்கான மருந்தொன்று இலங்கைக்கு இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்ட வேளையில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது,.
பின்னர் அரச மருந்தாக்கல் கூட்டுதாபனத்தின் ஆய்வுகளுக்கு உற்படுத்தி அதனை நிராகரித்த பின்னர் மீண்டும் குறித்த மருந்தை இறக்குமதி செய்ய தீர்மானம் எடுத்தோம். ஆகவே இந்த மருந்துக்கும் தடுப்பூசிக்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை எனவும் அவர் கூறினார். அதுமட்டுமல்ல தடுப்பூசிகள் ஒருபோதும் இரத்த மாதிரிகளில் உருவாக்கப்படுவதில்லை. முழுமையாக மருந்துகளில் தான் தடுப்பூசிகள் உருவாக்கப்படுகின்றது. உலகில் எங்கேயும் தடுப்பூசிகளில் எய்ட்ஸ் பரவியதாக பதிவாகவில்லை.
எனவே இவ்வாறான தவறாக கருத்துக்களை பரப்புவதை நிறுத்த வேண்டும். எ திர்காலத்திலும் இவ்வாறான கருத்துக்கள் பரவலாம். ஆனால் அவற்றை நம்பக்கூடாது. உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மாத்திரமே மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொவிட் -19 வைரஸ் உலகளவில் பரவிக்கொண்டுள்ள நிலையில் இலங்கையில் இப்போதும் வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது. தடுப்பூசி ஏற்றுகின்ற காரணத்தினாலேயே இந்த வேலைத்திட்டம் வெற்றியடைந்துள்ளது.
எனவே மக்கள் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள வேண்டும் என நாம் வலியுறுத்தி வருகின்ற நிலையில் தவறான கருத்துகளை பரப்பி மக்களை குழப்பும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அரச மருந்தாக்கல் கூட்டுதாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேகர தெரிவித்தார்.