சிலோன் கெட்ச் (தனியார்) நிறுவனத்தின் புதிய மீன் உற்பத்தி தொழிற்சாலை கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் நேற்று (2021.02.11) தங்கொடுவையில் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிறுவனம் அமெரிக்கா, ஜப்பான், கனடா, சீனா, தாய்லாந்து மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளுக்கு பதப்படுத்தப்பட்ட கடல் உணவை ஏற்றுமதி செய்யும் இலங்கையின் முன்னணி ஏற்றுமதியாளராவார்.
சிலோன் கெட்ச் (தனியார்) நிறுவனத்தின் வருடாந்த ஏற்றுமதி வருவாய் 12 மில்லியன் அமெரிக்க டொலராகும். புதிய தொழிற்சாலை திறக்கப்பட்டதன் ஊடாக 15 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் 150 ஊழியர்கள் மற்றும் 1,500 க்கும் மேற்பட்ட மீன்பிடி சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குடும்பங்கள் பயன்பெறும்.புதிய தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் ஏற்றுமதி இலக்கு தற்போதுள்ள மட்டத்தைவிட மூன்று மடங்காக அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
முகாமைத்துவ பணிப்பாளர் இந்திக எள்ளாவள மற்றும் ஸ்ரீஜித் ஜயதுங்க ஆகியோரின் முகாமைத்துவத்தின் கீழ் 2016 ஜுன் 15ஆம் திகதி இந்நிறுவனத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த சந்தர்ப்பத்தில் இராஜாங்க அமைச்சர்களான சனத் நிசாந்த, லொஹான் ரத்வத்தே உள்ளிட்ட சிலோன் கெட்ச் (தனியார்) நிறுவனத்தின் பணிப்பாளர் சபை, ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.