எரிபொருளுக்கான டொலர்களை தொடர்ந்தும் வழங்குவதாக இலங்கை மத்திய வங்கி கூறிய போதிலும் அது நடக்கவில்லை எனவும் டொலர் தொடர்ந்தும் வழங்கப்படுமாயின், நெருக்கடியின்றி எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்த முடியும் எனவும் எரி சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நானும் அமைச்சராக இருக்கும் அரசாங்கம் எதற்கு முன்னுரிமை வழங்குவது என்பதை முடிவு செய்ய வேண்டும். அப்பிள், திராட்சை, தோடம் பழத்தை சாப்பிட்டு இருளில் இருப்பதா?, வெளிநாடுகளில் இருந்து தண்ணீரை வரவழைத்து குடித்து வாகனங்களுக்கு எரிபொருள் இல்லாமல் இருப்பதா?. அல்லது அர்ப்பணிப்புகளை செய்து, மருந்து மற்றும் எரிபொருளுக்கு குறைந்தளவு அந்நிய செலாவணியை பயன்படுத்துவதா என முடிவு செய்ய வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் அப்பிள், திராட்சை பழங்கங்கள், தேன் என்பன இருக்கும் நாடாகவும் எரிபொருள் மற்றும் மருந்து இல்லாத நாடாகவும் இலங்கை இருக்க வேண்டுமா இல்லையா என்பதை அரசாங்கம் முடிவு செய்ய வேண்டும்.
எரிபொருள் நெருக்கடி என்பது உடலில் இரத்த ஓட்டம் இல்லாமல் போவது போன்ற விடயம். இலங்கைக்குள் எரிபொருள், மின்சார நெருக்கடிகள் இல்லை என்பது மட்டுமல்ல, அந்நிய செலாவணி நெருக்கடி மாத்திரம் இருந்தது.
கடந்த காலம் முழுவதும் அந்நிய செலாவணி நெருக்கடி ஏற்படும் எனக் கூறப்பட்டதுடன் அந்த பயங்கர கனவு தற்போது நனவாகி வருகிறது. இலங்கை கடந்த ஆண்டு இறக்குமதிகளுக்காக 21 பில்லியன் டொலர்களை செலவு செய்துள்ளது.
இதில் எரிபொருளை கொள்வனவு செய்ய 2.8 பில்லியன் டொலர்கள் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. சரியான முறையில் அந்நிய செலாவணியை முகாமைத்துவம் செய்து, தேவையற்ற செலவுகளை தவிர்த்தால், தொடர்ந்தும் எரிபொருள் மற்றும் மின் விநியோகத்தை வழங்க முடியும்.
எரிபொருளை ஏற்றி வந்த கப்பல்களை விடுத்துக்கொள்வதில் தாமதம் ஏற்பட்டால், எரிபொருள் கையிருப்பு குறைந்தது. புதிய தொகை கிடைக்கும் வரை விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த கட்டுப்படுத்தலின் பிரதிபலனாக எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் விநியோகம் குறைந்தது. இப்படியான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பணமுள்ளவர்கள் கொள்கலன்களில் எரிபொருளை நிரப்பிக் கொண்டிருப்பார்கள்.
வறிய மக்கள், முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாமல் போயிருக்கும் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்