டொலர் தட்டுப்பாடு காரணமாக வெளிநாடு களிலுள்ள இரண்டு இலங்கைத் தூதரகங் களையும், ஒரு துணைத் தூதரகத்தையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் படி ஈராக்கின் பாக்தாத்திலுள்ள இலங்கைத் தூதரகம், நோர்வேயின் ஒஸ்லோவில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள துணைத் தூதரகம் ஆகியன இம்மாதம் 31ஆம் திகதி முதல் மூடப்படவுள்ளன.
இலங்கை எதிர்கொண்டுள்ள பாரிய அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக வெளி விவகார அமைச்சு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம் அந்த நாடுகளிலுள்ள அந்தத் தூதரகங்களுக்கான தூதரகப் பணிகள் அருகிலுள்ள நாடுகளில் உள்ள தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் தற்போது அறுபத்து மூன்று வெளிநாட்டுத் தூதரகங்கள் உள்ளன.
இந்த அலுவலகங்கள் மூடப்படுவதன் மூலம் 60 ஆக குறைக்கப்படும். இதேவேளை டொலர் தட்டுப்பாடு காரணமாக 60 தூதரகங்கள் இயங்குவதிலும் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

