டி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி பங்குபற்றிய போது, அவுஸ்திரேலியாவின் சிட்னியில் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க (Danushka Gunathilaka) பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க (Roshan Ranasinghe) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறிப்பிடப்பட்டிருப்பது,
“விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் என்ற முறையில், மேற்கண்ட சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்டபோது நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.
இந்த விடயத்தில் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கும், அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கும் மற்றும் அதன் மக்களுக்கும் ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டிருந்தால், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் என்ற வகையில் எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
“இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தனுஷ்க குணதிலக்கவின் துல்லியத்தன்மையை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான சட்ட ஆதரவைப் பெறுவதற்கு வெளிவிவகார அமைச்சும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரும் இலங்கை கிரிக்கெட் சபையுடன் ஒருங்கிணைத்துள்ளனர்.”
“இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பான உண்மைகளை சரிபார்க்க, எனது தலைமையில், தேசிய விளையாட்டு சபையின் தலைவர், விளையாட்டு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளுடன் கலந்து கொண்ட விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (08-11-2022) விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சில் நடைபெற்றது.
“அங்கு ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து விளக்கமளிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் அமைச்சுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
ஆனால் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் வெளிநாட்டில் இருப்பதால், இந்நிகழ்வில் நிறுவனத்தின் பிரதிச் செயலாளர் கிருசாந்த கபுவத்த மாத்திரமே கலந்துகொண்டார்.
அவரது விளக்கத்தை கருத்தில் கொண்டு, நிலைமையை மேலும் விசாரிக்க ஒரு சுயாதீன குழுவை நியமிக்க அமைச்சு முடிவு செய்தது.
“மேலும் இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்கவும், கிரிக்கெட் வீரர்களுக்கு அமைச்சகம் வழங்கும் ஆதரவை மேலும் ஆராயும் நோக்கில் டி20 உலகக்கிண்ணத் தொடரில் பங்கேற்ற அணியின் முகாமையாளர், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் மற்றும் அணித்தலைவர் அமைச்சுக்கு அழைக்கப்பட்டு இவ்விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளனர்.