நாளைய தினம் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசிய கொடியினை அரைகம்பத்தில் பறக்க விடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மறைந்த முன்னாள் பாப்பரசர் 16 ம் பெனடிக்ட் அவர்க்ளின் இறுதிக் கிரியைகள் நாளை (05) இடம்பெறவுள்ள நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னாள் பாப்பரசர் 16 ம் பெனடிக்ட் (95) உடல்நலக் குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார்.
முன்னாள் பாப்பரசர் இரண்டாம் ஜான் பால் மறைவுக்குப்பின், போப்பாக பதவியேற்றவர் 16-ம் பெனடிக்ட். இவரது உண்மையான பெயர் ஜோசப் ரேட்சிங்கர். ஜெர்மனியின் பவேரியா மாநிலத்தில் கடந்த 1927-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் திகதி பிறந்தார். ஜெர்மனி ராணுவத்தில் பணியாற்றிய இவர் கடந்த 1945-ம் ஆண்டு ராணுவத்தில் இருந்து வெளியேறினார். அதன்பின் இவர், ஜெர்மனியில் இறையியல் பாடம் கற்பித்தார்.
கடந்த 1977-ம் ஆண்டு இவர் முனிச் நகரின் பிஷப்பாக நியமிக்கப்பட்டார். அடுத்த 3 மாதத்தில் இவரை கார்டினலாக பாப்பரசர் 6-ம் பால் நியமித்தார். முன்னாள் பாப்பரசர் இரண்டாம் ஜான் பால் மறைவுக்குப் பின் இவர் கடந்த 2005-ம் ஆண்டு போப்பாக தேர்வு செய்யப்பட்டார்.
இவரது 8 ஆண்டு பதவிக்காலத்தில் பல சவால்களை சந்தித்தார். பாதிரியார்கள் சிலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட போது, அந்த தவறுகளுக்காக இவர் மன்னிப்பு கேட்டார். ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்த 16-ம் பெனடிக்ட் பாதிக்கப்பட்டவர்களையும் நேரில் சந்தித்தார். தவறு செய்தவர்கள் மீது இவர் நடவடிக்கை எடுக்காததால், இவரது தலைமை குறித்தும் அப்போது விமர்சிக்கப்பட்டது.