ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம், தேர்தலை பிற்போடுவதற்கு முயற்சித்தால் சர்வதேச ஆதரவை முழுமையாக இழக்க நேரிடும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் நேற்று கூறுகையில்,
” உள்ளாட்சிசபைகளுக்கு இன்று மக்கள் பிரதிநிதிகள் இல்லை. எனவே, மக்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதுவே ஜனநாயக பண்பாகும் எனவும் அவர் கூறினார்.
சர்வதேச ஆதரவை இழக்க நேரிடும்
எனினும், தேர்தலை இழுத்தடிக்க ஆளுந்தரப்பு முற்படுவதாக அறியமுடிகின்றதாக தெரிவித்த அவர், இந்த ஜனநாயக விரோத செயலில் அரசு ஈடுபட்டால், சர்வதேச ஆதரவை இழக்க நேரிடும் எனவும் எச்சரித்தார்.
அதுமட்டுமல்லாது சர்வதேச கடன்களை பெறுவதிலும் சிக்கல்கள் உருவாகும். எனவே, ஜனநாயக வழியில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதேவேளை, யார் ஆட்சிக்கு வந்தாலும் தமது தரப்பு தர்மத்தின் பக்கமே நிற்கும் எனவும் வே. இராதாகிருஷ்ணன் எம்பி தெரிவித்தார்.