எதிர்வரும் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிறைவேற்று ஜனாதிபதியின் பதவி வெற்றிடத்திற்காக தான் போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
நாட்டின் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இன்று பதவியேற்றுக் கொண்டார். இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் சபாநாயகரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த கடிதம் தொடர்பில் இன்று விசேட அறிக்கை ஒன்றை விடுத்த சபாநாயகர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் திகதி முதல் தனது பதவியை சட்டப்பூர்வமாக இராஜினாமா செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
இந்நிலையில் அரசியலமைப்பின் பிரகாரம் புதிய ஜனாதிபதியை நியமிக்கும் வரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக செயற்படுவார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதியை நியமிப்பதற்கான நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு ஜூலை 16 ஆம் திகதி சனிக்கிழமை நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு உத்தேசித்துள்ளதாக அவர் கூறினார்.
அத்துடன், எதிர்வரும் 7 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நாடாளுமன்ற செயற்பாடுகளை நிறைவு செய்ய உத்தேசித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கூறியுள்ளார்.
இந்நிலையில் நிறைவேற்று ஜனாதிபதியின் பதவி வெற்றிடத்திற்காக தான் போட்டியிடவுள்ளதாக டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.