ஒரு ஜனநாயக தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 22வது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றியதன் மூலம், உலகிற்கு மிகச் சிறந்த முன்னுதாரணமாக செயல்பட்டுள்ளதாக ருஹுணு பல்கலைக்கழகத்தின் வேந்தர், கலாநிதி வணக்கத்திற்குரிய அக்குரெட்டியே நந்த தேரர் தெரிவித்துள்ளார்.
சேதவத்த, வேரகொட புராதன விகாரையின் கட்டின புண்ணிய நிகழ்வு இன்று (22) காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது. இங்கு உரையாற்றியபோதே நந்த தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு வழங்க, ஜனாதிபதி மேற்கொண்டிருக்கும் செயல்பாடானது நிச்சயமாக நாட்டின் அபிவிருத்திக்கு வழிவகுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விகாரையின் தலைவர் வணக்கத்திற்குரிய அம்பன்வெல ஞானலோக தேரரின் ஆலோசனைக்கு அமைய வருடாந்த கட்டின புண்ணிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்டின புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்டதுடன், பிக்குகளுக்கு அன்னதானமும் வழங்கினார்.
அங்கு கலாநிதி,வண. அக்குரெட்டியே நந்த தேரர் மேலும் உபதேசித்ததாவது-
ஜனநாயக உலகின் மிகச் சிறந்த அரசியல் தலைவர்களில் ஒருவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அறியப்படுகிறார். இன்று உலக நாடுகள் அனைத்தும் நம் நாட்டையே உற்று நோக்குகின்றன. ஜனாதிபதி தனது அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு மாற்றும் மாபெரும் செயற்பாடு ஜனநாயக கட்டமைப்பிற்குள் நடந்துள்ளது. 22 ஆவது திருத்தத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை விட அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளன. இந்த நாட்டில் புதிய யுகத்தை ஆரம்பிக்க தயாராகி வரும் இந்த நேரத்தில் இது மிகவும் முக்கியமான செயலாகும். சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்ற அனைத்து ஜனநாயக நிறுவனங்களும் இன்று நம்மை கவனித்துக் கொண்டிருப்பதால் இது மிகவும் முக்கியமானது.
2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மற்றும் மார்ச் மாதத்திற்குள், இந்த நாட்டின் எதிர்காலம் தொடர்பில் மிகவும் மோசமான நிலைமை உருவானது. அந்த சவாலான நேரத்தில், அனைத்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் விருப்பத்துடன் இந்த சவாலை ஏற்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வந்தார்.
உரம் இல்லாததால் உணவு உற்பத்தி குறைந்துள்ளது. உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. எரிபொருள் வரிசைகள் இருந்தன, எரிவாயு வரிசைகள் இருந்தன. இவ்வாறான பல சவால்களை வென்று நாட்டு மக்கள் அனைவருக்கும் ஓரளவு நிம்மதி கிடைக்கும் வகையில் இன்று ஜனாதிபதி தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்.
அத்துடன், பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட 21ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் பிரகாரம் குழுக்களுக்கு அதிகாரம் அளித்து, ஜனநாயக சமூகத்திற்கு பெரும் சேவையை செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சவால்களை வெற்றிகொள்வதற்கு இலங்கைக்கு ஆதரவளிப்பதாக சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட பல நிறுவனங்கள் இன்று ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளன.
நாம் அனைவரும் தற்போது கடினமான காலத்தைக் கடந்துகொண்டிருக்கிறோம். வரலாற்றைப் பார்க்கும் போது இவையெல்லாம் எமக்கு புதிதல்ல. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த சவாலை ஏற்றுக்கொண்டார்.
அவர் தனது நிறைவேற்று அதிகாரங்களை பரவலாக்கி, பாராளுமன்றத்திற்கு அதிகாரத்தை வழங்கியுள்ளமையானது இந்த நாட்டின் அபிவிருத்திக்கு வழிவகுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஜனாதிபதி நிறைய புத்தகங்களைப் படிப்பவர். தர்மப்படி வாழ்பவர், அவர் மிகவும் தூய்மையானவர் என்பதைப் பார்க்க முடியும். ஒரு நாளைக்கு 18 மணி நேரமும் மிகுந்த முயற்சியுடனும், அறிவுடனும், உழைப்புடனும், புத்திசாலித்தனத்துடனும் அவர் செய்து வரும் சேவையைப் பாராட்டி, அவர் நலம் பெற பிரார்த்திக்கிறோம்.
வரலாற்றுச் சிறப்புமிக்க சோமாவதி ரஜமஹா விகாரை, மல்வத்து விகாரையின் பதிவாளர் வணக்கத்துக்குரிய பஹமுனே சுமங்கல தேரர், ஜப்பான் பிரதம சங்கநாயக்கவான வணக்கத்துக்குரிய பெல்பொல விபாசி தேரர், இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர, முன்னாள் அமைச்சர் தயா கமகே, முன்னாள் இராஜாங்க அமைச்சர் அனோமா கமகே மற்றும் பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.