40 இலட்சம் தென்னங் கன்றுகளை நடும் ‘வீட்டுக்கு வீடு தென்னை மரம்’ என்ற தேசிய நிகழ்ச்சித்திட்டம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்துக்குச் சொந்தமான தங்கொட்டுவ – புஜ்ஜம்பொல, வெலிகெட்டிய தோட்டத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது வருடாந்தம் சுமார் 2,800 மில்லியன்களாக உள்ள தேங்காய் அறுவடையை, இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் 3,600 மில்லியன்களாக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த இலக்கை அடையும் நோக்குடன், நாடளாவிய ரீதியில் 40 இலட்சம் தென்னங் கன்றுகளை நடும் நிகழ்ச்சித்திட்டத்தை பெருந்தோட்டத்துறை அமைச்சு, தென்னை, கித்துள், பனை, இறப்பர் செய்கைகளை ஊக்குவித்தல் மற்றும் அவை சார்ந்த கைத்தொழில் பண்டங்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சு மற்றும் தென்னைப் பயிர்ச் செய்கை சபை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
நீண்ட காலமாக இலங்கையின் பெயரை சர்வதேச சந்தையில் உயர்ந்த நிலையில் வைத்திருப்பதற்கு, தேயிலை, தென்னை, இறப்பர் ஆகிய ஏற்றுமதிப் பயிர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எதிர்காலத்திலும் இந்த நிலைமையைப் பேணுவதற்கு, தென்னஞ் செய்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கு, ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு மில்லியன் தென்னங் கன்றுகளை சமூர்த்தி பயனாளிகளுக்கும் இரண்டு மில்லியன் தென்னங் கன்றுகளை நிவாரண அடிப்படையிலும் வழங்க தீரமானிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு மில்லியன் தென்னங் கன்றுகளை விரும்பியவர்கள் கொள்வனவு செய்து நடுவதற்கும் ஏற்ற வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்ச்சித் திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் வகையில், வெலிக்கெட்டிய தோட்டத்தில் ஜனாதிபதியின் கரங்களால் தென்னங்கன்று ஒன்று நடப்பட்டது. இந்தத் தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்ததாக, நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய வகையில், தென்னங் கன்றுகளை நடுதல் மற்றும் கன்றுகள் விநியோகம் என்பன, அனைத்து அமைச்சுகளினாலும் மேற்கொள்ளப்பட்டன.