செம்மணி அகழ்வுப் பணியின் போது எஸ்-25 என அடையாளம் தரப்பட்ட என்புத் தொகுதி – சுமார் 4 முதல் 5 வயதுடைய சிறுமியொருவரைச் சேர்ந்ததென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு மனித புதைகுழியில் குற்றவியல் சம்பவம் நடந்ததற்கான தடயங்கள் இருப்பதாக நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழி அகழ்வு வழக்கு நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கு தொடர்பான விடயங்களை காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தற்பரன் கருத்து தெரிவிக்கையில்,
அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள செம்மணி மனித புதைகுழி அகழ்வில் முதலாவதாக எடுத்த புதைகுழியில் 63 எலும்புக்கூடுகளும், அதற்குப் பிறகு கண்டெடுக்கப்பட்ட புதைகுழியில் இருந்து 2 எலும்புக்கூடுகளும் கண்டெடுக்கப்பட்டு மொத்தமாக 65 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டது.
சிறுபிள்ளை என சந்தேகிக்கப்படும் எலும்புக்கூடு சம்பந்தமாக மேலதிகமான ஆய்வுகளை செய்து தருமாறு நீதிமன்றினால் கூறப்பட்டதற்கு அமைவாக அது சம்பந்தமான அறிக்கை நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.
தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் இரண்டாம் கட்ட செயற்பாடுகள் தொடர்பிலான அறிக்கையும் சட்ட வைத்திய அதிகாரி பிரணவனின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. அது தொடர்பான சுருக்கமான விவரங்கள் மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது மூன்று விடயங்களை கோடிட்டு காட்டியுள்ளனர்.
மனித புதைகுழியில் குற்றவியல் சம்பவம் நடந்ததற்கான தடயங்கள் இருப்பதாக தாங்கள் கருதுவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
வழமையான சடலங்கள் தகனம் செய்யப்பட்ட தோற்றுவாய்கள் அங்கே காணப்படவில்லை என்ற விடயமும் மூன்றாவது இது சம்பந்தமாக மேலதிகமான ஆய்வுகள் தேவை என்ற விடயமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எஸ் 25, எஸ் 48, எஸ் 56 என அடையாளப்படுத்தப்பட்ட சிறுவர்களது என நம்பப்படும் எலும்புக்கூடுகள் தொடர்பான ஆய்வின் முடிவுகள் மிக முக்கியமானதாக காணப்பட்டது.
உடுப்பு உடைகள், எலும்பியல் சம்பந்தமான விடயங்களில் ஒருமித்த தன்மை இருந்ததாக கூறப்பட்டது.
அதிலும் குறிப்பாக நான்கு தொடக்கம் 5 உத்தேச வயதை கொண்ட சிறுமியின் உடைய எலும்புக்கூடாக இருக்கலாம் என்று சந்தேகத்தினை பேராசிரியர் வெளியிட்டு இருந்தார்.
அதனை தொடர்ந்து சட்டத்தரணிகள், பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஆகியோர் தமது பிரசன்னம் இந்த மனிதப் புதைகுழி அகழ்வு பிரதேசத்தில் கட்டாயம் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்தக் கோரிக்கையை மன்ற பரிசீலனைக்கு எடுத்தது.
ஏற்கனவே மன்று இட்ட கட்டளைக்கு அமைவாக அகழ்வு பகுதிக்கு விஜயம் செய்கின்ற பொழுது விண்ணப்பம் செய்து விஜயத்திற்கான தன்னுடைய காரணத்தினை வெளிப்படுத்தி நடபடி முறை ஏற்று பின்பற்றப்படுவதாக நீதிவான் எடுத்துச் சொல்லி இருந்தார்.
அதற்கு மேலதிகமாக யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தங்கள் பிரதிநிதிகளை அனுப்புவதற்கும் பொறுப்பாக பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் இரண்டு சட்டத்தரணிகள் காலை, மாலையில் இரண்டு சட்டத்தரணிகள் ஒரு கிரமமான முறையில் ஏற்கனவே அகழ்வாய்வில் ஈடுபடுகின்ற உத்தியோகத்தர்களுக்கு நிபுணர்களுக்கும் இடைஞ்சல் இல்லாத வகையில் ஈடுபடுத்துவதற்கும் மன்றினால் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சட்டத்தரணியின் பிரசன்னத்துடன் விஜயம் செய்யவும் மன்று அனுமதித்திருக்கிறது.
இப்படியாக அனுமதித்திருக்கிறபோதும் ஊடகவியலாளர்கள், நிபுணர்கள் புகைப்படம் எடுப்பதற்கு மட்டும் அனுமதித்திருக்கிறது. தேவையில்லாத கட்டுக்கதைகளையும் புனைகதைகளையும் அங்கே கண்டெடுக்கப்பட்ட சான்றாதாரங்கள் சம்பந்தமான பொருள்களையும் மக்கள் மத்தியில் தேவையில்லாத விசனத்தையும் ஏற்படுத்தும் என்ற காரணத்தால் அதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது.
அடுத்த அகழ்வு பணிகளை 21 ஆம் திகதி ஆரம்பிப்பதாக சட்ட வைத்திய அதிகாரி மன்றுக்கு அறிவித்திருக்கிறார். ஆகவே 21ம் திகதி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் – என்றார்.
குறித்த செம்மணி புதைகுழி அகழ்வு வழக்கு ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி திறந்த நீதிமன்றத்தில் அழைக்கப்படவுள்ளது.