“நாட்டின் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துதல், மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடாத்துதல் மற்றும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை மேற்கொள்ளுங்கள்….சகலரையும் உள்ளடக்கிய அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு மற்றும் நியாயமான நல்லிணக்க செயன்முறை என்பன நிலையான அமைதிக்கு வழிகோலும்…”
இவ்வாறு ஐநாவின் 60ஆவது கூட்டத் தொடரில் இந்தியப் பிரதிநிதி உரையாற்றி உள்ளார்.நாட்டின் அரசியலமைப்பை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று இந்தியா கேட்பது அதன் நடைமுறை அர்த்தத்தில் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துங்கள் என்பதுதான்.
இந்தியாவின் நிலைப்பாடு புதியது அல்ல.இந்தியா கடந்த 16ஆண்டுகளுக்கு மேலாக ஐநாவில் இந்த நிலைப்பாட்டைத்தான் வலியுறுத்தி வருகிறது.ஐநாவில் ஒருமுறை இந்தியா வாக்கெடுப்பில் கலந்து கொள்வதில்லை. மற்றும்படி இலங்கையின் யாப்பை முழுமையாக நிறைவேற்று என்று கூறுவதன் மூலம் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்து என்பதைத்தான் இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.அது இந்தியாவின் தொடர்ச்சியான நிலைப்பாடு.
இந்தியா மட்டுமல்ல ஐநாவிடமும் மேற்கு நாடுகளிடமும் சில மாறாத நிலைப்பாடுகள் உண்டு.அவற்றைத் தமிழ்த் தரப்பு உற்றுக் கவனிக்க வேண்டும். முதலாவதாக ஐநாவின் எல்லா அறிக்கைகளிலும் இலங்கை அரசுத் தரப்பை மட்டுமல்ல விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் விசாரிக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது. கடந்த வாரம் மனித உரிமைகள் ஆணையாளர் வாசித்து அளித்த அறிக்கையிலும் அது தொடர்பான ஒரு சிறு பந்தி உண்டு.இரண்டாவதாக,இலங்கைத் தீவில் நடந்தது இனப்படுகொலை என்பதனை இன்றுவரை ஐநா உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை.ஐநா மட்டுமல்ல பெரும்பாலான மேற்கு நாடுகளிலும் அதுதான் நிலைமை.
உத்தேச ஐநா தீர்மான வரைபு என்ற ஓர் ஆவணம் கடந்த ஒன்பதாந் திகதி வெளிவந்தது.இது உட்சுற்றுக்கானது.இறுதியானது அல்ல.இந்த ஆவணத்திலும் இலங்கை அரச படைகளோடு விடுதலைப் புலிகள் அமைப்பும் பொறுப்புக் கூற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.அதுமட்டுமல்ல அந்த ஆவணத்திலும் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது, மாகாண சபைத் தேர்தல்களை வைப்பது போன்ற விடயங்கள் கூறப்படுகின்றன.
கனடாவில் இந்த அழிப்புத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கலாம்.ஆனால் அங்கேயும் அது கனடாவின் உத்தியோகபூர்வ வெளியுறவுக் கொள்கையாக இல்லை.கனடா ராஜபக்சங்களுக்கும் சில படைப்பிரதானிகளுக்கும் பயணத் தடையும் உட்பட ஏனைய தடைகளை விதித்து இருக்கிறது. ஆனால் அதே கனடா தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு தொகுதி அரசியல்வாதிகளுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் விசா வழங்குவதில்லை.குறிப்பாக பொங்கு தமிழை முன்னெடுத்த முன்னாள் பல்கலைக்கழக விரிவுரையாளருக்குக்கூட விசா இல்லை.
எனவே ஐநாவிலும் மேற்கு நாடுகள் மத்தியிலும் சில மாறாத நிலைப்பாடுகள் தொடந்தும் உண்டு. அப்படித்தான் இந்தியாவிலும். அரசுகள் தங்கள் தங்கள் ராணுவப் பொருளாதார அரசியல் நோக்கு நிலையில் இருந்து சில தீர்மானங்களை எடுக்கும்.அன்பின் அடிப்படையிலோ அல்லது நீதி நியாயத்தின் அடிப்படையிலோ அல்ல. அரசுகளின் அரங்காகிய ஐநாவிலும் அரசுகளின் உத்தியோகபூர்வ தீர்மானங்களின் அடிப்படையில்தான் நிலைப்பாடுகள் எடுக்கப்படும். இதில் அரசுகளை எப்படி அசைப்பது என்று தமிழ் தரப்புத்தான் சிந்தித்து செயல்பட வேண்டும். கடந்த 16 ஆண்டுகளாக அவ்வாறு அரசுகளை நோக்கி லொபி செய்வதில் தமிழ்த் தரப்பு எதுவரை முன்னேறியிருக்கிறது?
ஐநாவுக்கு கூட்டுக் கடிதங்களை அனுப்பினால் மட்டும் தீர்வு கிடைத்துவிடும் என்று நம்புவது அப்பாவித்தனமானது. அதற்கு கடந்த நான்கு ஆண்டுகளே சாட்சி.இம்முறை கட்சிகள் மட்டுமல்ல சிவில் சமூகங்களும் இரண்டு கடிதங்களை அனுப்பியுள்ளன.இப்படிச் சிதறிப்போயிருக்கும் ஒரு மக்கள் கூட்டம் கடிதங்களை எழுதிவிட்டு வாளாயிருக்க முடியாது.அதற்குமப்பால் கடுமையாக உழைக்க வேண்டும்.லொபி செய்ய வேண்டும்.எல்லாவற்றிக்கும் முதலில் ஈழத் தமிழர்கள் வெளி உலகத்தை அணுகுவதற்கு என்று ஒரு வெளியுறவுக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.அக்கட்டமைப்பு கட்சிசாராத ஒன்றாகவும் அந்த கட்டமைப்பு எடுக்கும் முடிவுகளுக்கு சம்பந்தப்பட்ட எல்லா கட்சிகளும் கட்டுப்படக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.
இரண்டாவதாக அந்த கட்டமைப்பானது அரசியல்வாதிகளோடு சேர்த்து தாயகத்திலும் டயஸ்போராவிலும் உள்ள குடிமக்கள் சமூகங்களைச் சேர்ந்தவர்களையும் துறைசார் புத்திஜீவிகளையும் உள்ளடக்கியதாக விரிவு படுத்தப்பட வேண்டும்.
அந்த வெளியுறவுக் கட்டமைப்பானது ஒரு வெளியுறவுக் கொள்கையை, வெளியுறவு அணுகுமுறையை வகுத்துக்கொள்ள வேண்டும்.இந்தியாவை எப்படி அணுகுவது?மேற்கு நாடுகளை எப்படி அணுகுவது?சீனாவை எப்படி அணுகுவது? ஏனைய ஆசிய ஆபிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளை எப்படி அணுகுவது? போன்ற விடயங்களில் தெளிவான வெளியுறவு நிலைப்பாடுகளை எடுத்து, அந்த அடிப்படையில் செயற்பட வேண்டும்.
ஆனால் கடந்த 16 ஆண்டுகளாக அவ்வாறான அனைத்துக் கட்சி கட்டமைப்பு ஒன்றை உருவாக்க முடியவில்லை.அப்படி ஒரு கட்டமைப்பு இல்லாத வெற்றிடத்தில் வெளிவிவகார அணுகுமுறை என்பது ஒவ்வொரு கட்சியினுடைய அல்லது கட்சி பிரமுகருடைய தனி ஓட்டமாகத்தான் அமையும்.அதுதான் இப்பொழுது நடக்கிறது.இவ்வாறு தமிழ் மக்கள் மத்தியில் ஒரு மையமான கட்டமைப்பு இல்லாதபோது கட்சிகளைப் பிரித்துக் கையாள்வது நாடுகளுக்கும் ஐநா போன்ற பொது அமைப்புகளுக்கும் இலகுவாக இருக்கும்.அதுதான் இப்பொழுது நடக்கிறது.
அரசுகள் எப்பொழுதும் அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்புச் சார்ந்துதான் முடிவு எடுக்கும். அறநெறிகளின் அடிப்படையில் முடிவெடுப்பது மிகக்குறைவு. அப்படி முடிவு எடுத்தாலும் இறுதியிலும் இறுதியாக என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கப் போவது புவிசார் அரசியலும் பூகோள மற்றும் பிராந்திய அரசியலும்தான்.எனவே கடந்த 16 ஆண்டுகளாக நீதிக்கான போராட்டத்தில் தமிழ் மக்களின் முன்னேற்றம் திருப்தியாக இல்லை என்று சொன்னால் அதற்குக் காரணம் நாடுகளை நோக்கிய தமிழ் மக்களின் லொபி ஒருமுகப்படுத்தப்பட்டதாக இல்லை என்பதுதான்.தமிழ் மக்கள் ஓர் அரசு போல ஒரு மையத்திலிருந்து முடிவு எடுத்து செயல்படவில்லை என்பதுதான்.
செம்மணி மனிதப் புதைகுழி திறந்து வைத்திருக்கும் புதிய வாய்ப்புகளின் பின்னணியில் ஐநாவில், புதுடில்லியில், நியூயோர்க்கில் ஈழத்தமிழர்கள் தொடர்பான முடிவுகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை என்பதைத்தான் அறுபதாவது ஐநா கூட்டத்தொடரில் இதுவரையிலுமான நடப்புகள் நமக்கு உணர்த்துகின்றன. தமிழ் மக்கள் தமது கோரிக்கைகள் நியாயமானவை நீதியானவை என்பதனால் உலக சமூகம் தங்களை அங்கீகரிக்க வேண்டும், தங்களைப் பாதுகாக்க வேண்டும், தங்களுக்கு உரிய தீர்வை பெற்றுத்தர வேண்டும் என்று நம்புவது அப்பாவித்தனமானது.அரசியலில் நீதி நியாயங்களை நலன்சார் உறவுகள்தான் தீர்மானிக்கின்றன. 16 ஆண்டுகளின் பின் மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால் மேற்காசியாவில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. உலக அரசியலானது அறநெறிகளின் அடிப்படையிலானது அல்ல.நீதி நியாயங்களின் அடிப்படையிலானது அல்ல என்பதனை அது மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டேயிருக்கிறது.
எனவே தர்மம் வெல்லும் நீதி வெல்லும் என்றெல்லாம் அப்பாவித்தனமாக நம்பிக் கொண்டிருக்காமல் உலகின் தலைநகரங்களில் எப்படி லொபி செய்யலாம் என்று தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும். அரசல்லாத மனிதநேய அமைப்புக்கள்,மனித உரிமை அமைப்புகள்,சில சமயங்களில் மத நிறுவனங்கள் போன்றவற்றிடம்தான் தர்மமும் நீதியும் எடுபடும். நிச்சயமாக அரசுகளிடம் அல்ல. பலஸ்தீனர்களின் விடயத்தில் தென்னாபிரிக்கா அவ்வாறு அறம் சார்ந்து ஒரு முடிவை எடுத்தது. ஆனால் அதனால் காசாவில் நடக்கும் இன அழிப்பை தடுத்து நிறுத்த முடியவில்லை.
நிகழும் அறுபதாவது ஐநா கூட்டத் தொடரை செம்மணிக்கு ஊடாக தமிழ் மக்கள் பார்க்கலாம். ஆனால் ஐநாவோ இந்தியாவோ அமெரிக்காவோ அல்லது பிரித்தானியாவோ ஐரோப்பிய சமூகமோ அதை செம்மணிக்கூடாகத்தான் பார்க்கும் என்று எதிர்பார்ப்பது அப்பாவித்தனமானது.மாறாக அவை தங்களுடைய ராணுவ பொருளாதார ராஜிய நலன்களின் அடிப்படையில் தான் பார்க்கும். எனவே தமிழ் மக்கள் வேலை செய்ய வேண்டிய இடம் அது.
காசாவுக்கு கிடைக்காத நீதி செம்மணிக்கு கிடைக்கும் என்று எந்த அடிப்படையில் எதிர்பார்க்கிறோம்? இந்த கேள்விக்கு அறம் சார்ந்து அரசியலை நோக்கும் தமிழர்கள் பதில் சொல்ல வேண்டும். நீதி பொதுவானது என்றால் தமிழ் மக்களுக்கு கிடைக்கும் அதே நீதி காசாவுக்கும் கிடைக்க வேண்டும். எனவே காசாவுக்கு ஏன் நீதி கிடைக்கவில்லை என்ற கேள்வியில் இருந்தே தமிழ் மக்கள் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்ற விடையைத் தேட வேண்டும்.