யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரியின் 17 வயதுடைய வலதுகை வேகப்பந்துவீச்சாளர் குகதாஸ் மாதுலன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வலைபந்துவீச்சாளராக இணைந்துகொண்டுள்ளார்.
இண்டியன் பிறீமியர் லீக் ஆரம்பமாவதற்கு ஒரு வாரம் இருக்கும் நிலையில் மாதுலன் இரண்டு தினங்களுக்கு முன்னர் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்துகொண்டுள்ளார்.
ஒரு வாரத்திற்கு முன்னர் யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 117ஆவது வடக்கின் சமர் கிரிக்கெட் போட்டியில் சென். ஜோன்ஸ் சார்பாக பந்துவீசிய மாதுலன், எதிரணி வீரர் தகுதாஸ் அபிலாஷை இரண்டாவது இன்னிங்ஸில் யோக்கர் பந்தின் மூலம் ஆட்டம் இழக்கச் செய்திருந்தார்.
அவரது பந்துவீச்சுப் பாணி லசித் மாலிங்கவின் பந்துவீச்சை ஒத்ததாக இருந்ததுடன் மாதுலன் வீசிய யோக்கர் பந்து சமூக ஊடகங்களில் பரவியது. இதனை அடுத்து இளம் வீரர் குகதாஸ் மாதுலனின் பந்துவீச்சை பார்க்க சென்னை சுப்பர் கிங்ஸ் அணித் தலைவர் எம்.எஸ். தோனி விரும்பியதாக செய்தி வெளியாகியது.
இந்நிலையில் சென்னை சுப்பர் கிங்ஸ் உரிமையாளர்களால் குகதாஸ் மாதுலன் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது சென்னையில் இருக்கும் குகதாஸ் மாதுலனின் பந்துவீச்சை சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பயிற்றுநர் குழாம் அவதானித்து வருவதடன் அவருக்கு தேவையான பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் வழங்கிவருவதாக அறியக் கிடைக்கிறது.
இதில் ஒரு விசித்திரம் என்னவென்றால், குகதாஸ் மாதுலனின் பந்துவீச்சு இலங்கை பயிற்றுநர்களினதோ தெரிவாளர்களினதோ கண்களில் படாமல் போன நிலையில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணித் தலைவர் எம்.எஸ். தோனி கண்ணில் பட்டுள்ளது..