கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் இந்தியா உட்பட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பேருந்து, ஆட்டோ என எந்த வித போக்குவரத்து வசதி சேவைகளும் இல்லாத இந்த நிலையில் சென்னை ஆவடியை சேர்ந்த லியோ ஆகாஷ் ராஜ் (தன்னார்வலர் ) சென்னையிலுள்ள கர்ப்பிணி பெண்களுக்கு இலவசமாக வாகன சேவையை செய்து வருகிறார்.
இது குறித்து லியோ ஆகாஷ் ராஜ் கூறுகையில், ‘இந்த இலவச சேவைக்காக நான் மட்டுமில்லாமல் எனது நெருங்கிய நண்பரின் காரும், பிறகு ஒரு ஆட்டோவையும் நாங்கள் முழுமையாக பயன்படுத்தி வருகிறோம்.
சென்னை முழுவதும் இந்த சேவையை செய்து வரும் நிலையில் ஒரு நாளுக்கு கிட்ட தட்ட 30 அழைப்புகள் வரை எங்களுக்கு வருகிறது’ என பெருமையுடன் தெரிவித்துள்ளார். ஊரடங்கு சமயத்தில் லியோ ஆகாஷ் ராஜின் சேவையை குறித்து கர்ப்பிணி பெண்கள் கூறுகையில், ‘ஊரடங்கு சமயத்தில் இப்படி ஒரு உதவி என்பது எங்களை போல கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று.
ஆன்லைன் மூலமாக தான் இவரது லியோவின் தொலைபேசி எண் எங்களுக்கு கிடைத்தது. தொடர்பு கொண்டு பேசிய சில மணித்துளிகளில் உடனடியாக வந்து உதவி செய்தார்’ என்கின்றனர்.
மிகவும் கடினமான ஒரு சூழலில் கர்ப்பிணி பெண்களுக்கு லியோ ஆகாஷ் ராஜ் செய்து வரும் இலவச வாகன சேவை மக்களிடையே மிகுந்த பாராட்டைப் பெற்றுள்ளது.