சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ள பிரம்மாண்டமான சரக்குக் கப்பலால் அந்த கடல்வழிப் பாதையில் போக்குவரத்து தடை ஏற்பட்டு உலக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
உலகின் பல்வேறு நாட்டு சரக்குக் கப்பல்களும் சூய்ஸ் கால்வாய் பாதையைப் கடல் வழி போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், சூயஸ் கால்வாயில் பிரம்மாண்டமான சரக்குக் கப்பல் ஒன்று சில தினங்களுக்கு முன் சிக்கிக் கொண்டுள்ளது. குறித்த கப்பலை கூடிய விரைவில் மீட்கவில்லை என்றால் உலகப் பொருளாதாரமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
1869 ஆம் ஆண்டில் நிறைவு செய்யப்பட்ட அந்தக் கால்வாய் வழியாக உலக வர்த்தகத்தின் 12 சதவீதம் நடைபெற்று வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, குறுக்கே சிக்கிக் கொண்ட கப்பலின் உரிமையாளரான ஜப்பானின் ஷோயேய் கிசேன், சர்வதேச வர்த்தகத்துக்கு இழப்பை ஏற்படுத்திய இந்த விபத்துக்கு மன்னிப்புக் கோரியுள்ளார்.
400 மீட்டர் நீளமும் 2 இலட்சம் டன் எடையும் கொண்ட அந்தக் கப்பலை மணலில் இருந்து வெளியே கொண்டு வர முடியாமல் மீட்புக் குழுவினர் இருக்கின்றனர்.
இந்நிலையில், சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ள பிரம்மாண்டமான சரக்குக் கப்பல் காரணமாக அந்த கடல்வழிப் பாதையில் போக்குவரத்து தடைபட்டுள்ளதால் மணிக்கு 2,900 கோடி ரூபா அளவுக்கு இழப்பு ஏற்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூயஸ் கால்வாயின் தெற்கு முனையில் காத்திருக்கும் கப்பல்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து வருவதாக மேயர்ஸ்க் ஒஹாயோ எனும் சரக்குக் கப்பலின் தலைமைப் பொறியாளர் ஜோ ரெனால்ட்ஸ் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
இந்த ஒரு கப்பல் சூயஸ் கால்வாயில் தரைதட்டி நிற்பதால், உலகெங்கும் உள்ள கப்பல்களின் போக்குவரத்து அட்டவணையில் தாக்கம் உண்டாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இன்னும் அதிக அளவு வேலைகள் செய்ய வேண்டியுள்ளது என்று தெரிவித்துள்ள அவர், தம்மாலோ தமது குழுவினராலோ அருகில் இருக்கும் கப்பல்களின் குழுவினருடன் தொடர்புகொள்ள இயலவில்லை என்று தெரிவித்துள்ளார்.
தங்களுக்கு நேர்ந்துள்ள இக்கட்டுகளையும் மீறி எம்.வி. எவர் கிவன் கப்பலில் சிக்கியுள்ள இந்தியாவைச் சேர்ந்த 25 ஊழியர்களின் மன நிலையை நினைத்து கவலைப்பட்டார்.
“கடலோடிகளாக நாங்கள் எண்ணற்ற விவகாரங்கள் குறித்து புகார் கூறுவோம். ஆனால், கடலோடிகள் சிலர் சிக்கி இருக்கும்போது, வேறு சில கடலோடிகள் நிலையை சரி செய்ய இரவு பகலாக முயற்சிக்கிறார்கள். நாங்கள் பலரும் அந்த நிலையை அனுபவித்துள்ளோம், ” என்று அவர் கூறினார்.
தரைதட்டிய கப்பல் மீண்டும் நகரும் வரை போக்குவரத்தைத் திசைதிருப்ப, கால்வாயின் பழைய தடத்தை எகிப்து, மீண்டும் திறந்துள்ளது.
இந்தத் தடையால் சர்வதேச சந்தைகளில் எண்ணெய் விலைகள் ஏற்றம் அடைந்து வருகின்றன.
உலகளாவிய வர்த்தக சரக்குகளின் சுமார் 12% சூயஸ் கால்வாய் வழியாகவே செல்கிறது, இது மத்தியதரைக் கடலைச் செங்கடலுடன் இணைக்கிறது மற்றும் ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான குறுகிய தூரமுள்ள கடல் வழியாகவும் உள்ளது.
சூயஸ் கால்வாய்க்கு மாற்று வழியாக ஆசியா – ஐரோப்பா இடையே பயணிக்க வேண்டுமானால் ஆப்ரிக்க கண்டத்தின் தெற்கு முனையான நன்னம்பிக்கை முனையைச் சுற்றித்தான் செல்ல வேண்டும்.
ஆனால் அதற்கு சுமார் 2 வார காலம் கூடுதல் நேரம் தேவைப்படும். அதற்கேற்ப எரிபொருள், உணவுக் கையிருப்பு ஆகியவையும் அதிகமாகும்.
பனாமாவில் பதிவு செய்யப்பட்ட மற்றும் எவர்கிரீன் என்ற கப்பல் நிறுவனத்தால் இயக்கப்படும் எவர் கிவன் என்ற கப்பல், சீனாவிலிருந்து நெதர்லாந்தில் உள்ள துறைமுக நகரமான ரோட்டர்டாமிற்குப் புறப்பட்டு, மத்தியதரைக் கடலுக்குச் செல்லும் வழியில் கால்வாய் வழியாக வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.