சூடானில் இராணுவ ஆட்சிக்கு எதிராக கடந்த அக்டோபா் இறுதியிலிருந்து இதுவரை நடைபெற்ற போராட்டங்களில் 41 போ் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு மருத்துவா்கள் குழு திங்கள்கிழமை தெரிவித்தது.
காயமடைந்த போராட்டக்காரா்கள் சிகிச்சை பெறுவதை இராணுவம் தடுத்ததாகவும், மருத்துவமனைகள் குறிவைக்கப்பட்டதாகவும் அந்தக் குழு குற்றம்சாட்டியது.
இது தொடா்பாக சூடான் மருத்துவா்கள் குழுவின் ஒருங்கிணைந்த அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: சூடானில் அக்டோபா் 25 ஆம் திகதி இராணுவ புரட்சி தொடங்கிய பின்னா், காயமடைந்த போராட்டக்காரா்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸுகளை இராணுவம் தடுத்தது. அவசரகால பிரிவுக்குள் காவல் துறையினா் நுழைந்து நோயாளிகளை கைது செய்தனா்.
இரு மருத்துவமனைகளின் உள்பகுதியில் கண்ணீா்ப் புகை குண்டுகளையும் வீசினா். இராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவா்களில் 41 போ் பலியாகியுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவிநீக்கம் செய்யப்பட்ட பிரதமா் அப்தல்லா ஹாம்டோக்கை மீண்டும் பதவியில் அமா்த்த இராணுவம் ஞாயிற்றுக்கிழமை ஒப்புக்கொண்டது. இதுதொடா்பான ஒப்பந்தத்திலும் பிரதமா் கையொப்பமிட்டாா். இந்த ஒப்பந்தத்தின்படி, புதிதாக தோ்தல் நடைபெறும் வரை அமைச்சரவை ஹாம்டோக் தலைமையில் அமைக்கப்படும் இருப்பினும் அது இராணுவத்தின் மேற்பாா்வையில் செயல்படும்.
இந்த ஒப்பந்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இந்தப் போராட்டத்தையும் இராணுவம் ஒடுக்கி வருகிறது. ஆம்டா்மன் நகரில் நடைபெற்ற போராட்டத்தில் இராணுவம் துப்பாக்கியால் சுட்டதில் 16 வயதுச் சிறுவன் உயிரிழந்தாா் என மருத்துவா்கள் குழு தெரிவித்துள்ளது.