எந்தப்பக்கம் பார்த்தாலும் எல்லோரிடமும் ஏதோ ஓர் பிரச்சனை இருந்தது அதாவது ஏதாவது ஒரு காரணத்தினால் மக்கள் மனஉளைச்சலுக்கு உட்பட்டிருந்தார்கள் என சுவிஸ் நாட்டில் சமூக சேவையாளராக கடமையாற்றிவரும் தமிழரான நந்தினி முருகவேல் கூறியுள்ளார்.
கோவிட் காலப்பகுதியில் சமூக சேவையாளர்கள் மேற்கொண்ட செயற்பாடுகளை பாராட்டி பேர்ண் மாவட்டத்தின் பிரதான பத்திரிகையில் கடமையாற்றும் பத்திரிரிகை நிருபர் ஒருவர் பேர்ண் மேற்குப்பகுதியில் சமூகசேவையாளர்களில் ஒருவராக கடமையாற்றும் இணையர் நந்தினி முருகவேளிடம் நேர்முக உரையாடலை மேற்கொண்டிருந்தனர்.
அதன்போதே அவர் இதனைக்கூறியுள்ளார்.
இக் கலந்துரையாடலில் நந்தினி முருகவேள் கருத்துத் தெரிவிக்கையில்,
எந்தப்பக்கம் பார்த்தாலும் எல்லோரிடமும் ஏதோ ஓர் பிரச்சனை இருந்தது அதாவது ஏதாவது ஒரு காரணத்தினால் மக்கள் மனஉளைச்சலுக்கு உட்பட்டிருந்தார்கள்.
எடுத்துக்காட்டாக வேலையிடத்தினால் அவர்களுக்கு ஏற்பட்ட வேலைஇழப்பு, வேலைகுறைப்பு, இவற்றினால் அவர்களுக்கு ஏற்பட்ட நிதிப்பிரச்சனை, எல்லோருமே இந்தக்காலப்பகுதியில் வீட்டில் இருந்தமையால் குடுப்பங்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், சிறுவர்கள் இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்ளும் கல்வியில் உள்ள பிரச்சனைளகள்,இவ்வாறு பல உள்ளன.
இவ்வாறான எல்லாப்பிரச்சனைகளையும் என்னிடம் கூறி அதற்கான ஓர் சாதகமான முடிவினை பெற்றுத்தருமாறு தங்களது தலைச்சுமைகளை என்னிடம் இறக்கிவைத்துவிட்டு அவர்கள் நிம்மதியாக வீடு சென்றுவிடுவார்கள். ஆனால் எல்லோருடைய தலைச்சுமையையும் நான் சுமந்ததால் என் தலை மக்களின் பிரச்சனைகளால் நிறைந்து விட்டது.
இவ்வாறான பிரச்சனைகளை நீங்கள் எவ்வாறு தீர்த்து வைத்தீர்கள் என்ற கேள்விக்கு விடையளிக்கும் போது வேலை இழப்பைப் பெற்றுக்கொண்டவர்களின் வேலைவழங்குனர்களுடன் தொடர்பினை மேற்கொண்டு இந்தக் காலகட்டத்தில் நீங்கள் இவர்களை வேலைகளை விட்டு நீக்குவது அவர்களை நிதிரீயாக மட்டுமல்ல உளரீதியாகவும் பாதிக்கும் எனவே தயவுசெய்து உங்களது வேலைநீக்க உடன்படிக்கையை இரத்துச் செய்யுங்கள் என தயவாக வேண்டுகோள் விடுத்திருந்தோம்.
எமது வேண்டுகோளை ஏற்று வேலை வழங்குனர்கள் வேலைநீக்க உடன்படிக்கையை இரத்துச் செய்தார்கள். அனைத்து வேலை வழங்குனர்களுக்கும் பேர்ண் மேற்குப்பகுதியின் சமூகசேவையாளர்களுக்கு நன்றியைத் தெரிவித்தோம்.
இந்தக் காலப்பகுதியில் மக்களுக்கு ஏற்பட்ட நிதிப்பிரச்னை தீர்ப்பதற்காக பேர்ண் மாவட்டத்தில் இயங்கிவரும் சமூக நிதி உதவிநிறுவனங்களுடன் தொடர்புகளை மேற்கொண்டு மக்களுடைய நிதிப்பிரச்சனையை குறுகிய காலத்திலே தீர்த்து வைத்தோம்.
வழமையாக சமூக நிதி உதவியைப் பெறுவதற்கான விண்ணப்பத்திரங்களை பூர்த்தி செய்து அந்திதியினைப் பெற்றுக்கொள்வதற்கு 3 கிழமைகள் தேவைப்படும். ஆனால் இந்தக்காலப்பகுதியில் மக்களுக்குத் தேவையான அவசரநிதித் தேவையை தயவுசெய்து உடனடியாகப் பூர்த்தி செய்து தாருங்கள், பின்னர் விபரமாக உங்களுக்கு விண்ணப்படிவங்களை பூர்த்தி செய்து அனுப்புகின்றோம் என்ற எமது வேண்டுகோளை ஏற்று 1 வாரத்திலே நாங்கள் விண்ணப்பித்த அனைவருக்கும் நிதிஉதவியை வழங்கியிருந்தார்கள்.
அத்துடன் இந்தக்காலப்பகுதியில் சமூக நிதி உதவியை விட மேலதிக உதவியாக சுவிஸ் நாட்டு செஞ்சிலுவைச் சங்கத்தினால் வழமையான வருமானத்தை விட குறைவான வருமானம் பெற்றவர்களின் வாடகைப்பணம், மருத்துவக்காப்புறுதி போன்றவற்றை பொறுப்பேற்றுக்கொண்டார்கள். இவ் நிதி உதவிக்கான விண்ணப்பங்களையும் நாங்கள் மேற்கொண்டு இவ் நிதியை மக்களுக்கு பெற்றுக்கொடுத்திருந்தோம்.
வயோதிபர்களின் பராமரிப்பும், அவர்களுக்கான தேவைகளை நிறைவுசெய்து கொடுக்கும் பணி இக்காலப்பகுதியில் மிகவும் முக்கியமாக இருந்தது. எல்ல நாட்டு வயோதிப மக்களும் வீட்டிற்குள் முடங்கிய காலப்பகுதி இது.
இவர்களுக்கான அத்தியாவசிப்பொருட்களை அங்காடியில் வாங்கிக்கொடுப்பது, அவர்களுக்கான மருத்துவ வசதிகளை செய்துகொடுப்பது, மொழிபெயர்ப்புகளை மேற்கொள்வது, அவர்களை வைத்தியரிடம் அழைத்துச் செல்வது என பல பணிகளை நாம் மேற்கொண்டோம்.
எங்களுக்கு உதவியாக 100 இற்கு மேற்பட்ட எல்லா நாட்டு உயர்வகுப்பு, பல்கலைக்கழக மாணவ, மாணவிகளும் கை கோர்த்து தங்களது உதவிகளை வழங்கினார்கள். சில நாட்களில் 7 வயோதிபர்களுக்கு ஒரே நாளில் நான் மொழிபெயர்ப்பிற்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. இந்த வேளையில் எனது மகள் அருளினி எனக்கு உறுதுணையாக இருந்து சில மொழிபெயர்ப்புக்களை மேற்கொண்டிருந்தார்.
தன்னுடைய சுவிஸ் நாட்டு நண்பிகளுடன் இணைந்து எங்களுக்கு உதவியாக இருந்தார்.
இக் காலகட்டத்தில் எங்களது மனதை உருகவைக்கும் பல நிகழ்வுகளையும் நாம் சந்தித்தோம்.
பல வயோதிபர்கள் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டிலே இருந்தார்கள். இவ்வாறானவர்களுக்கு தேவையான உதவிகளை நானும், என்னுடைய நண்பியும் செய்திருந்தோம். அவர் பேர்ண் மாவட்டத்தின் சமூகசேவையாளர்களின் பொறுப்பாளார் ஆவார்.
அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி நாங்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பெட்டிக்குள் வைத்துவிட்டு கீழே நின்று அறிவிப்போம். 80 தொடக்கம் 90 வயதுவரையான சுவிஸ் நாட்டு மக்கள் பலரை நாம் இவ்வாறு சந்தித்தோம்.
அவர்கள் தங்களது சாளரத்தைத் திறந்து மேலே இருந்து எம்மைப் பார்த்து எங்களுடன் 5 நிமிடம் கதைத்துவிட்டுச் செல்லுங்கள் எனக் கூறுவார்கள். இந்தச் சந்தர்ப்பங்கள் எங்கள் மனதை உருக்கின. இதன் பின்னர் ஓர் ஒழுங்கான இடைவெளியில் நாம் எல்லோருடனும் உரையாடி அவர்களுடைய மனஉளைச்சளைக் குறைத்திருந்தோம். இவர்கள் எல்லோரும் எங்களை தங்களது பிள்ளைகளாகவே பார்த்தார்கள்.
நாங்களும் அவர்களை எங்களது பெற்றோர்களைப் போலவே மனநிறைவுடன் பராமரித்தோம்.
மக்களால் எங்களிடம் முன்வைக்கப்பட் கோரிக்கைகளில் 99% ஐ நாங்கள் நிறைவுசெய்து கொடுத்து மனமகிழ்ச்சி அடைந்தோம்.
இக் காலப்பகுதியில் பெண்கள் அதிக பிரச்சனைகளை எதிர்நோக்கினார்கள். காலையில் நான் எழுந்த உடனே தொலைபேசியில் அழைக்கத் தொடங்கிவிடுவார்கள். இரவு 11 மணிமட்டும் தொலைபேசி அழைப்பு வந்துகொண்டே இருக்கும். அதிக நாட்களில் நாங்கள் ஒரு வேளை மட்டுமே இரவுநேரச் சாப்பாட்டை மட்டுமே உட்கொண்டிருக்கின்றோம். பெண்களுக்கான உரையாடல்களை தொலைபேசி மூலமாக ஒவ்வொரு நாளும் மேற்கொண்டிருந்தோம்.
என்னிடம் ஓர் கேள்வியை நிருபர் கேட்டிருந்தார், நீங்கள் ஓர் குடும்பப்பெண்மணி இரு பிள்ளைகளின் தாயார், இவ்வாறான சந்தர்ப்பத்தில் நீங்கள் எவ்வாறு இவ்வளவு சேவைகளைச் செய்தீர்கள் என, என்னுடைய கணவர் இக்காலப்பகுதியில் பகுதிநேரவேலைக்குச் சென்றதால் வீட்டுவேலைகளை என்னுடைய பிள்ளைகளுடன் இணைந்து செய்து எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்கள்.
என்னுடை இரு பிள்ளைகளும் தங்களது பாடசாலைக் கல்வி நேரத்தைத் தவிர வீட்டுவேலைகளுக்கும், என்னுடைய சமூகவேலைகளுக்கும் உதவியாக இருந்தார்கள்.
வழமையாக எமது வேலையின் ஒரு பகுதியாக மக்களின் பிரச்சனைகள் கோரிக்கைகள் இருக்கும். ஆனால் இக்காலப்பகுதியில் எமது முழுநேர வேலையாக மக்களின் கோரிக்கைகளை நிறைவு செய்வதாகவே அமைந்தது. என்னுடைய வேலை நேரத்தை விட பல நூற்றுக்கணக்கான மணித்தியாலங்களை செலவிட்டு இலவசமாகவே இச் சேவையை நான் வாழும் சுவிசுநாட்டில் வாழும் தமிழ் மக்களுக்காகவும், சுவிஸ் நாட்டு மக்கள் உட்பட ஏனைய நாட்டவர்களுக்கும் இக்கட்டான நேரத்தில் வழங்கியிருந்தேன்.
2005 ஆம் ஆண்டிலுpருந்தே பேர்ண் மேற்குப்பகுதியில் நான் சமூகசேவையாளராக கடமையாற்றுகின்றேன். அந்த வகையில் நான் எங்களுடைய மக்களின் பல பிரச்சனைகளை தீர்த்து பல அனுபவங்களைப் பெற்றிருக்கின்றேன். 15 ஆணடு அனுபவங்களும் இக் காலப்பகுதியில் எனக்கு மிகவும் உறு துணையாக இருந்தன.
இங்கே நான் குறிப்பிட்டவை பேர்ண் மேற்குப்பகுதி சமூக சேவையாளர்கள் இக்காலப்பகுதியில் ஆற்றிய பணிகளின் ஒரு பகுதியே ஆகும்.
நான் இச் சமூகசேவைகளை செய்வதற்கு எப்பொழுதும் பக்கபலமாகவும் ஊக்குவிப்பவர்களாகவும் இருப்பவர்கள் எனது கணவர் பொன்னம்பலம் முருகவேள் ஆசிரியர் அவர்களும், என்னுடைய இரு பிள்ளைகளான அருளினியும், அம்பலனும்.என்னுடைய இச் சேவையைப் பாராட்டுக்களுக்கும் இவர்களும் ஓர் மூல காரணம் . எனவே என்னுடைய கணவருக்கும், பிள்ளைகளுக்கும் தலை தாழ்த்தி இரு கை கூப்பி வணங்கி நன்றியினைத் தெரிவிக்கின்றேன்.
இங்கே நான் மேலதிகமாக ஒன்றை இச் சந்தர்ப்பத்தில் கூற விரும்புகின்றேன்.
என்னுடைய தந்தையார் அமரர் குழந்தைவேலு கிருட்ணசாமி ஓர் சிறந்த சமூக வேவையாளர். இவர் தான் வாழும் காலப்பகுதியில் தன்னால் இயன்ற உதவிகளை தான் வாழ்ந்த இடங்களில் செய்துவந்தவர். இறுதியாக இவர் வாழ்ந்த கிளிநொச்சி, விவேகானந்த நகர் மக்களுக்கு செய்த சேவைகளில் இலவசமாச தண்ணீர் வசதியினைப் பெற்றுக் கொடுத்ததும் ஒன்றாகும்.
எங்களுடை தந்தையார் 22.02.2020 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். 22.02.2021 ஓர் ஆண்டு நிறைவு பெறுகின்றது. என்னுடைய சேவையைப்பாராட்டி எனக்குக் கிடைத்த அனைத்துப் பாராட்டுக்களையும் என்னுடைய தந்தையார் காலடியில் சமர்ப்பிக்கின்றேன்என்று கூறியுள்ளார்.
இணையர் நந்தினி முருகவேள் பேர்ண் மாவட்டத்தில் பேர்ண் மேற்குப்பகுதியில் தமிழ்மக்களின் சமூகசேவையாளராகவும், ஆலோசகராகவும், சுவிஸ் நாட்டு அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளராகவும், கணக்காளாராகவும், பெண்களுக்கான உரையாடல்களை ஓர் ஒழுங்கான இடைவெளியில் நடத்தும் பொறுப்பாளராகவும், வயோதிபர்களுக்கான சேவைகளை வழங்குபவராகவும், பேர்ண் வள்ளுவன் பாடசாலையின் ஆசிரியையாகவும் கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.