சுவிட்சர்லாந்தில் உளவியல் ஆலோசனை கோரும் பதின்ம வயதினரின் எண்ணிக்கை எப்போதுமில்லாமல் அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.சுவிட்சர்லாந்தில் பதின்ம வாதினர் அதிக அளவில் உளவியல் ஆகோசனை கோரும் நிலைக்கு தள்ளப்படுவதன் காரணம் கொரோனா இரண்டாவது அலை என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
சுமார் 20,000 துறை சார்ந்த நிபுணர்களை கொண்ட Sanasearch என்ற இணைய தளத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து உளவியல் ஆலோசனை கோரும் பதின்ம வயதினரின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.மேலும் இரண்டாவது கொரோனா அலை காலகட்டத்தில் மட்டும், உளவியல் ஆலோசனை மற்றும் சிகிச்சை கோரும் பதின்ம வயதினரின் எண்ணிக்கை 52 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
உணவு எடுத்துக் கொள்வதில் சிக்கல் அதிகரிப்பு மற்றும் அதிகரித்த தற்கொலை எண்ணம் ஆகியவை பின்விளைவுகளாக குறிப்பிடப்படுகின்றன.இரண்டாவது அலை தொடங்கிய பின்னர் சிறார்கள் மற்றும் பதின்ம வயதினரிடம் இருந்து சுமார் 60 சதவீத அழைப்புகள் உளவியல் ஆலோசனை கோரி வருவதாக மருத்துவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.தங்கள் வேலைவாய்ப்பு பயிற்சியை இழந்த 16 வயதிற்குட்பட்ட இளைஞர்கள், தனிமையாக உணர்கிறவர்கள் அல்லது மனச்சோர்வடைந்தவர்கள் அடிக்கடி ஆலோசனை கோரி அழைக்கிறார்கள் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அவ்வாறான பதின்ம வயதினருக்கு, தூக்கத்தை தொலைக்க வேண்டாம் எனவும், வேளா வேளைக்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள் எனவும் மனதை லேசாக வைத்துக் கொள்ள முயற்சி மேற்கொள்ளுங்கள் எனவும் ஆலோசனை வழங்குவதாக குறிப்பிட்டுள்ளனர்.மேலும், அவர்கள் நல்ல நண்பர்களுடன் தொடர்பைப் பேணுவதோடு தங்களை அதிகமாக தனிமைப்படுத்திக் கொள்ளாமல் இருப்பதும் முக்கியம் என தெரிவித்துள்ளனர்.