சீன கடற்படையின் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதலாவது மின்காந்த உந்துகணை தொழில்நுட்பம் கொண்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘புஜியான்’ , வெற்றிகரமாக தரையிறக்கும் திறனைப் பரிசோதனை செய்துள்ளது.
இது சீனாவின் விமானம் தாங்கிக் கப்பல்களின் வளர்ச்சியில் ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
சீனாவின் உள்நாட்டு தயாரிப்பான முதல் மின்காந்த உந்துகணை தொழில்நுட்பம் கொண்ட விமானம் தாங்கிக் கப்பலான ‘புஜியான்’ , J-15T, J-35 மற்றும் KJ-600 ஆகிய மூன்று வகையான போர் விமானங்களை வெற்றிகரமாக ஏவி, தரையிறக்கும் பயிற்சியை மேற்கொண்டதாக சீன மக்கள் விடுதலை இராணுவக் கடற்படை அறிவித்துள்ளது.
இந்த வெற்றிகரமான பயிற்சி, சீனாவின் உள்நாட்டு மின்காந்த உந்துகணை மற்றும் விமான நிறுத்த அமைப்புகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்துள்ளது. இந்த தொழில்நுட்பம் பல்வேறு வகையான விமானங்களுடன் இணக்கமாகச் செயல்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது.
சீன விமானப் போக்குவரத்து மற்றும் கடற்படைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹான் வெய், இந்த வெற்றி சீன கடற்படையின் மூலோபாய மாற்றத்திற்கு முக்கிய ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 3 ஆம் திகதியன்று, சீன மக்கள் எதிர்ப்புப் போரின் 80 வது ஆண்டு நிறைவையொட்டி இடம்பெற்ற இராணுவ அணிவகுப்பில், J-15T, J-35 மற்றும் KongJing-600 ஆகிய விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
சீனாவின் முதல் கப்பல் அடிப்படையிலான, நிலையான இறக்கைகள் கொண்ட இந்த ஆரம்ப எச்சரிக்கை விமானம், கண்காணிப்பு மற்றும் வான்வெளிப் பாதுகாப்பின் வரம்பை கணிசமாக விரிவாக்கும்.
ஐந்தாம் தலைமுறை மறைந்து தாக்கும் விமானமான J-35, எதிரிகளின் பாதுகாப்பு வளையத்தை ஊடுருவும் திறனைக் கொண்டுள்ளது. அதேசமயம் J-15T, கடல் மற்றும் நிலப்பரப்பு இலக்குகளைத் தாக்கும் வலுவான திறனைக் கொண்டுள்ளது.
மின்காந்த உந்துகணைகள் இந்த விமானங்களை முழு எரிபொருள் மற்றும் ஆயுதங்களுடன் மிக வேகமாக ஏவவும், தரையிறக்கவும் உதவுவதால், கப்பலின் போர் திறன் வெகுவாக அதிகரிக்கும் என பேராசிரியர் ஹான் வெய் விளக்கியுள்னார்.
‘புஜியான்’ கப்பல், சீனாவின் மூன்றாவது விமானம் தாங்கிக் கப்பலாகும். இது ஜூன் 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
சீனாவின் முதல் இரண்டு கப்பல்களான ‘லியாவோனிங்’ மற்றும் ‘ஷாண்டோங்’ ஆகியவற்றுக்கு மாறாக, ‘புஜியான்’ கப்பல் ஒரு தட்டையான விமான ஓடுதளத்தைக் கொண்டுள்ளது.
அதன் மொத்த எடை 80,000 தொன்களுக்கு அதிகமாகும். மே 2024 இல் தனது முதல் கடல் சோதனைகளை ஆரம்பித்ததிலிருந்து, ‘புஜியான்’ கப்பல் திட்டமிட்டபடி பல சோதனைகளை நடத்தி வருகிறது.
இந்நிலையில் அனைத்துத் துறைகளிலும் பல்வேறு கண்டுபிடிப்புக்களை முன்வைத்து சீனா தன் வளர்ச்சியைப் பதிவு செய்து வருகன்றமை குறிப்பிடத்தக்கது.