பல்வேறு சர்ச்சைகளை தோற்றுவித்துள்ள சீன கண்காணிப்புக் கப்பலான யுவாங் வாங் – 5 ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் அனுமதிப்பதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கைத்துறைமுக அதிபர் நிர்மல் பி சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, யுவாங் வாங் 5 தற்போது திட்டமிட்டதை விட ஐந்து நாட்கள் தாமதமாக, அதாவது எதிர்வரும் 16 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தை வந்தடையவுள்ளது. அத்துடன், இந்த கப்பல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை முன்னதாக கடந்த 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவிருந்தது. தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி இந்தியா கடுமையான கவலைகளை எழுப்பியிருந்த நிலையில் அதன் வருகை தாமதமானது. இந்த விவகாரம் குறித்து மேலும் ஆலோசனைகள் நடத்தப்படும் வரை பயணத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை சீனாவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
எனினும், குறித்த கப்பல் சீனாவிலிருந்து, பயணத்தை ஆரம்பித்து 24 நாட்களின் பின்னரே, அதாவது இலங்கையை வந்தடைவதற்கு மூன்று நாட்கள் இருந்த நிலையில் கடந்த 8 ஆம் திகதியே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக அண்மையில் முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்ரிபால சிறிசேன அண்மையில் நாடாளுமன்றில் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கினால் இந்தக் கப்பல் தொடர்பான கவலைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன் வருகையை எதிர்ப்பதற்கான உறுதியான காரணங்களை வழங்குமாறு அவரிடம் கோரப்பட்டது. இதே செய்தியை இந்திய தூதரக அதிகாரிகளுக்கு வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இரு தரப்பினரும் “உறுதியான காரணங்களை” முன்வைக்காததால், இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை சீனாவின் கப்பலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் அனுமதிப்பது இலங்கைக்கு புவிசார் அரசியல் தலையிடியாக மாறியுள்ளது.
ஜனாதிபதி விக்கிரமசிங்க பதவியேற்பதற்கு முன்னர், சீனாவின் குறித்த கப்பலை நங்கூரமிடுவதற்கான அனுமதி இலங்கையின் வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை (SLPA) ஆகியவற்றால் சீனாவுக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது