இந்நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு சீனாவிடமிருந்து கிடைக்கும் தொடர்ச்சியான ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கைக்கான சீன தூதுவர் சீ.ஷென்ஹொனின் முன்னிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பாராட்டினை தெரிவித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சீன தூதுவர் சீ.ஷென்ஹொன் நேற்று (27) அலரி மாளிகையில் சந்தித்த போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கொவிட் தொற்று நிலைமையை கட்டுப்படுத்தல் மற்றும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்பு தொடர்பில் சீன அரசாங்கத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
இலங்கையின் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு வாழ்த்து தெரிவித்த சீன தூதுவர் சீ.ஷென்ஹொன், அதற்கு சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்பு தொடர்ந்து இலங்கைக்கு வழங்கப்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.
சீன மக்கள் வங்கி (PBOC) மற்றும் இலங்கை மத்திய வங்கி (CBSL) இடையிலான 10 பில்லியன் சீன யுவான் மதிப்பிலான இருதரப்பு நிதி பரிமாற்ற ஒப்பந்தமானது, உலகளாவிய முதலீட்டாளர்களின் உணர்வை வலுப்படுத்தவும், இலங்கையின் பொருளாதாரம் மீதான நம்பிக்கையை அதிகரிப்பதற்கும் உதவும் என சீன தூதுவர் இதன்போது வலியுறுத்தினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 65 ஆண்டு நிறைவு மற்றும் இரப்பர் அரிசி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாகின்றமை ஆகியவற்றை குறிக்கும் 2022ஆம் ஆண்டானது, இலங்கை – சீன இருதரப்பு உறவின் மிக முக்கியமான ஆண்டாக விளங்கும் என சீன தூதுவர் சீ.ஷென்ஹொன் நம்பிக்கை தெரிவித்தார்.
அடுத்த மாதம் வரவிருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தை முன்னிட்டு சீன ஜனாதிபதி மற்றும் சீன பிரதமரின் சார்பில் சீன தூதுவர் முன்கூட்டிய பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.