தமிழ் மொழி என்பது ஆதி மொழி என்றும், இதனை உலகின் பல நாடுகளிலும் உள்ள மக்கள் பேசி வருகின்றதாகவும், இதன்மூலம் தமிழ் மொழியின் பாரம்பரியத்தை புரிந்து கொள்ள முடியுமெனவும், சகோதர இனத்தவரான கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் “நல்லிணக்கத்தின் திறவுகோல் மொழியே” எனும் தொனிப் பொருளின்கீழ் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், குச்சவெளி,தம்பலகாமம்,திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மாதர் சங்கங்கங்கள், பெண்கள் அமரா சமாஜ உறுப்பினர்கள், இளையோர் உள்ளிட்டோர்களுக்கு மொழியின் அவசியத்தை வழியுறுத்தும் கலந்துரையாடல் இன்று புதன்கிழமை திருகோணமலை ஜீப்லி மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே இதனை தெரிவித்தார். நிகழ்வில் உரையாற்றிய அவர்,
சிங்கள மொழி என்பது தனித்துவமான மொழியாகும். இது எமது நாட்டில் மாத்திரமே பேசப்படுகின்றது. இதனால் தனித்துவமான எமது நாட்டுக்குரிய மொழியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.
எமது நாட்டில் இடம்பெறுகின்ற சில பிரச்சினைகளுக்கு மொழியும் ஒரு காரணமாக காணப்படுகின்றது. இதனால் சிங்கள மொழி பேசுவோர் தமிழையும், தமிழ்மொழி பேசுவோர் சிங்கள மொழியையும் கற்றுக் கொள்வோமாக இருந்தால் சில பிரச்சினைகளை இலகுவாக தீர்த்துக் கொள்ள முடியும்.
எனவே எமது நாட்டை முன்னோக்கி நகர்த்த மொழி ரீதியான முரண்பாடுகளை கழைந்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் தெரிவித்தார்