மட்டக்களப்பு – சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை புத்தூர் சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்றில் பேருந்தின் சாரதி படுகாயம் அடைந்துள்ளார்
இந்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் (03-08-2023) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த இ.போ.ச சொந்தமான பேருந்து புத்தர் சந்தி பகுதியில் உள்ள பேருந்து பயணிகள் தரிப்பிடத்தில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
குறித்த விபத்தினால் பயணிகள் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படாத போதும் பேருந்தின் சாரதி படுகாயமடைந்துள்ளார்.
விபத்து தொடர்பாக பேருந்தில் முன் இருக்கையில் பயணித்த பயணிகள் தெரிவிக்கையில்,
விபத்து இடம்பெறுவதற்கு சற்றுமுன்னர் திடீரென பேருந்தின் பிரேக் மற்றும் ஸ்ரேறிங் இயங்கவில்லை என சாரதி தெரிவித்த சில விநாடிகளில் விபத்து இடம்பெற்றதாக குறிப்பிட்டனர்.
குறித்த விபத்தின்போது யாழிலிருந்து சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மற்றும் டிப்பர் வாகனங்களும் சிறிதளவு சேதமடைந்துள்ளதோடு 50 வருடங்களுக்கு மேற்பட்ட பழமையான பயணிகள் தரிப்பிடம் முற்றாக இடிந்து விழுந்துள்ளது.
மேலும் இந்த விபத்து தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.