இந்தியாவில் கட்டிடத் தொழிலாளி ஒருவருக்கு லொட்டரியில் சுமார் 80 லட்சம் ரூபாய் விழுந்த சம்பவம் அவருக்கு இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் பிரதீபா மண்டல். இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள மருதங்குழி பகுதியில் தங்கியிருந்து கட்டிட தொழிலாளியாக வேலைபார்த்து வந்துள்ளார்.
மிக வறுமையில் இருக்கும் மண்டல் தனக்கு கிடைக்கும் பணத்தில் முக்கால் பகுதி தனது வீட்டிற்கு அனுப்பியும் மீதி உள்ளவற்றை தானும் செலவு செய்து வந்துள்ளார்.இதற்கிடையில் லொட்டரி சீட்டுகள் வாங்கும் பழக்கம் கொண்ட பிரதீபா மண்டல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கேரள அரசின் காருண்ய பாக்கியகுறி லொட்டரி வாங்கியுள்ளார்.
இந்நிலையில் இன்று அவருக்கு பம்பர் பரிசாக 80 லட்சம் ரூபாய் விழிந்துள்ளது.இதை அறிந்த பிரதீபா மண்டல் என்ன செய்வதென்று அறியாமல், மகிழ்ச்சி கலந்த பயத்தில் இருந்துள்ளார்.ஏனெனில், தன்னிடமிருந்து யாராவது லொட்டரி டிக்கெட்டை பிடுங்கி கொள்வார்கள் என நினைத்து பொலிசாரின் உதவியை நாடியுள்ளார்.
அதன் பின் கேரள காவல்துறையினர் மண்டல் கூறுவது உண்மையா என சம்பந்தப்பட்ட லொட்டரி நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசி உறுதிப்படுத்திகொண்டனர்.இதையடுத்து பிரதீபா மண்டலுக்கு விழுந்த லொட்டரி சீட்டு தொகையை வங்கியில் டெபாசிட் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால் பிரதீபா மண்டலுக்கு நிரந்தரமாக வீட்டு முகவரியும் இல்லை, வங்கியில் சேமிப்பு கணக்கும் இல்லை.
இதனால், பிரதீபா மண்டலுக்கு தற்காலிகமாக ஒரு முகவரியில் வங்கியில் கணக்குதொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு அவரின் 80 லட்சம் ரூபாய் பணமும், அவரையும் பொலிசார் தங்களது வாகனத்தில் பாதுகாப்புடன் வங்கிக்கு அழைத்து சென்று வங்கிக்கணக்கில் செலுத்தினர்.
இதுகுறித்து பிரதீபா மண்டல் கூறுகையில், நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். எங்க குடும்பம் வறுமையால் சாப்பிடக்கூடா முடியாம இருந்தோம்.
இந்த பரிசு விழுந்த லாட்டரி சீட்டை யாராவது கொண்டு போயிருவாங்கனு பயந்தேன். அதன் காரணமாகவே காவல்நிலையத்திற்கு சென்றேன். இந்த பரிசுத் தொகையில் புதிய வீடு கட்டுவேன். புதிய கார் வாங்குவேன் என சந்தோஷமாக கூறியுள்ளார்.