எதிர்க்கட்சிகளின் செயற்பாடுகள் தொடர்பில் எதிர்வரும் தேர்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள். இந்த எதிர்க்கட்சிகள் உண்மையில் நாட்டுக்கே சாபக்கேடு என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்ட முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் உடுகம்பலையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் பிரசன்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் வேலைநிறுத்தப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. அரச அதிகாரம் பெறுவதற்கு முன்பிருந்தே பொதுமக்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வேலைநிறுத்தம் செய்து வரும் ஒரு கும்பல், ஆட்சி அதிகாரம் கிடைத்தால் என்ன செய்வார்கள் என்று நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.
இப்படிப்பட்டவர்களிடம் இருந்து நல்ல எதிர்காலத்தை மக்கள் எதிர்பார்க்க முடியாது. தற்போது சம்பளத்தை அதிகரிக்க முடியாது. 2024 வரவு – செலவுத் திட்டத்தில் அதற்கான ஒதுக்கீடு எதுவும் செய்யப்படவில்லை.
ஆனால், அடுத்த வருடம் முதல் சம்பளத்தை அதிகரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக ஜனாதிபதி தொழிற்சங்கங்களுக்கு அறிவித்துள்ளார். அரசு என்ற ரீதியில் நாம் அவ்வாறு கூறினாலும் அவர்கள் அதே இறைச்சியை, இறாத்தலையே கேட்கின்றனர்.
கடனை மறுசீரமைக்க கடன் வழங்குபவர்களுடன் இலங்கை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. இது ஒரு நாடாக எமக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். நாம் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்து வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வோம் என்பதை இந்த ஒப்பந்தம் உறுதிப்படுத்தியது. இந்த உடன்படிக்கையின் மூலம், நாம் இப்போது வெளிநாட்டுக் கடன்களை செலுத்தும் திறன் கொண்ட நாடாக இருப்பதை கடன் வழங்குனர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.
நாடு வங்குரோத்து ஆனதாக அறிவித்த பிறகு, நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அரசு மீண்டும் நிறைய நடவடிக்கைகளை எடுத்தது. வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்க கடன் கொடுத்த தரப்பினரை ஒப்புக்கொள்ளச் செய்ததே நமது நாட்டின் மிகப்பெரிய சாதனையாகும். அதற்காக இரண்டு வருடங்கள் பேச்சு நடத்த வேண்டியிருந்தது.
கோவிட் தொற்றுநோய் நிலைமை மற்றும் போராட்டத்தால், நமது பொருளாதாரம் சரிந்தது. நாட்டின் அபிவிருத்தித் திட்டங்கள் அப்படியே நிறுத்தப்பட்டன. எனவே, கடந்த காலத்தில் மிகவும் கடினமான காலகட்டத்தை எதிர்கொண்டோம்.

