பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தங்கள் கட்சி தலைவர் மீது பொய் குற்றச்சாட்டுகள் சுமத்துவதாகவும், சாணக்கியன் மீது வழக்கு தொடரப்போவதாகவும் அறிவித்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அமரர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் படுகொலையின் பின்னனியில் இருந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் ஐவர் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, ஐந்து வருட தடுப்புக்கு காவலுக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த சந்தேக நபர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் எவ்வித ஆதாரமும் அற்றவை என்பதை சுட்டிக்காட்டி அவர்களை நிரபராதிகள் என கனம் மேல் நீதிமன்றம் விடுவித்து விடுதலை செய்திருந்தது.
இவ் வழக்கில் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலையானவர்களில் எமது கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முதல் முதல்வருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களும் ஒருவராவார்.
இந்நிலையில் குறித்த கௌரவ நீதிமன்றத் தீர்ப்பின் பின்னரும் அமரர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் கொலைக்கு காரணமானவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்று மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரான கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் அவர்கள் அடிக்கடி சித்தரித்து வசைபாடி வருவதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
அத்தோடு அமரர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் படுகொலையை வைத்து கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் போன்றவர்கள் அரசியல் பிழைப்பு நடாத்துவதானது அமரர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் ஆன்மாவை கேவலப்படுத்தும் ஈனச்செயலாகும்.
எந்த வேளையிலும் அரசியல் காழ்புணர்ச்சியின் வெளிப்பாடாக சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களை நோக்கி சுட்டுவிரல் நீட்டுவது குறித்த படுகொலைக்குரிய உண்மையான குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கிலானதா? அத்தகைய திசை திருப்பும் முயற்சியொன்றில் கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் அவர்கள் ஈடுபடுகின்றாரா? என்கின்ற சந்தேகங்களும் எல்லோருக்கும் எழுந்திருக்கின்றது.
எது எப்படியிருப்பினும் அவரது உண்மைக்கு புறம்பான, அரசியல் அவதூறு பேச்சுக்கள் எமது கட்சித் தலைவர் அவர்களின் சுய கௌரவத்தை கேள்விக்குள்ளாக்குவதையும் எமது கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதனையும் தொடர்ந்து அனுமதிக்க முடியாது.
கௌரவ நீதிமன்றினால் நிரபராதியாக தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவரை மீண்டும் மீண்டும் குற்றவாளி என சித்திரித்து உண்மைக்கு புறம்பாக, மக்களிடையே பேசிவருவதானது கௌரவ நீதிமன்றத்தினுடைய தீர்ப்பைக் கேள்விக்குள்ளாக்குவதுடன் இலங்கையின் நீதித்துறையின் மாண்பை அவமதிக்கின்ற செயலாகும்.
எனவே பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் அவர்களின் நீதிமன்ற அவமதிப்புக்கெதிரான செயற்பாட்டிற்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோருவதுடன், நாமும் இதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை தொடரவுள்ளோம்.
எது எவ்வாறு இருப்பினும் அமரர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் கொலைக்குரிய உண்மையான குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டு, சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுடன் எவர் ஒருவர் சட்டத்திற்கு முரணாக செயற்படுகின்றாரோ அவர் எந்தவிதமான பாரபட்சம் இன்றி சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி மிக உறுதியாக உள்ளது. என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.