தலைவர் சம்பந்தன் ஐயாவின் நிலைப்பாட்டினை மறுத்து செயற்பட்டால் அது இலங்கை தமிழரசுக்கட்சி கட்சிக்கு முரணான விடயம் என்பதுடன் அதனை பலவீனப்படுத்தும் செயற்பாடு என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் உள்ள மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழரசுக்கட்சியின் தீர்மானத்தினை மீறி ஐநாவுக்கு கடிதம் எழுதியதாக வெளியான கடிதம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் என எட்டு உறுப்பினர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை தெளிவுபடுத்தவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
வடகிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டும்தான் தமிழ் பிரதிநிதிகளை உருவாக்கிய கட்சி. அந்த நிலைப்பாட்டினை கடந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நிராகரித்துள்ளதாகவும் இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
வடகிழக்கில் தமிழர்கள் மீது பொலிஸாரின் கெடுபிடிகள் அதிகரித்துவருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ஐ.நா மனித உரிமை பேரவையில் வாசிக்கப்பட்ட அறிககையில் மிக முக்கியமான விடயங்கள் பற்றி பேசப்பட்டிருந்தது. இலங்கையில் நடந்த மிக முக்கியமான சம்பவங்கள் தொடர்பாகவும் அந்த அறிக்கையில் பேசப்பட்டு இருந்தது. எமது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன், ஐ.நாவுக்கு அனுப்பிய கடிதத்தில் இருந்த, மிக முக்கியமான விடயங்கள் உள்வாங்கியிருந்ததாகவும் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும் என்று மறைமுகமாக கூறி, இனியும் ஐ.நா மனித உரிமை பேரவையை ஏமாற்ற முடியாது என்ற தகவலையும் கூறியிருக்கின்றார்.
120000 பேருடைய வாக்குமூலங்களை எவ்வாறு செயற்படுத்துவது என்பது தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டுள்ளது. அகவே அது வரவேற்க வேண்டிய விடயம். ஐ.நாவில் இலங்கை அரசாங்கம் சரணடையும் நிலைப்பாடு இருக்கும்போதும் கூட கடந்த சில நாட்களாக நடக்கும் சம்பவங்களை பார்க்கும் போது ஐ.நாவுக்கு போலியான ஒரு நடிப்பை வெளிக்காட்டுகின்றது என்பதை ஐ.நா விளங்கிகொள்ள வேண்டும்.
விசேடமாக மட்டக்களப்பில் இரண்டு இளைஞர்கள் மிக மோசமாக பொலிசாரால் தாக்கப்பட்டு இருந்தனர் வடக்கு கிழக்கில் பொலிஸாரின் அத்துமீறல் இடம்பெற்று வருகின்றதை வண்மையாக கண்டிக்கின்றோம். பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்து வைத்திருக்கும் கைதிகளை அனுராதபுரம் சிறையில் வரிசையில் முலங்கால் இட்டு அவர்களது தலையில் துப்பாகி வைத்து அச்சுறுத்தியதாக சமுக வலைத்தளங்களில் காணக் கூடியதாக இருக்கின்றது.
குறித்த விடயம் தொடர்பாக அந்த இராஜாங்க அமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இருக்கின்றது. ஐ.நா மனித உரிமைப் பேரவையில் நாங்கள் இவற்றையெல்லாம் செய்ய மாட்டோம் என்று கூறி விட்டு தற்போது இலங்கை அரசாங்கம் செயற்படுவது அவர்களுடைய இரட்டை வேடத்தை காட்டுகின்றமை துரதிஸ்டவசமாக இருக்கின்றது . தமிழர்களை பாதுகாக்க வேண்டிய ஒரு சில அரசியல்வாதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயம் தொடர்பாக மௌனம் காப்பது ஒரு கவலையான விடயம். மட்டக்களப்பிலே பல இடங்களில் அரசாங்க கட்சி சார்ந்த அரசியல்வாதிகள் காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்கத்தைச் சார்ந்த சிலர் துணை போகின்றனர்.
இவ்வாறே மட்டக்களப்பு அரசு சார்ந்த அரசியல்வாதிகள் மக்களுடைய காணிகளை சுவீகரிக்க அரசுடன் இணைந்து செயற்படுவதை அறியும்போது வேதனை அளிக்கின்றது. கடந்த வாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சதோச நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. நான் நினைக்கின்றேன் இந்த சதோச நிலையம் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுல் படுத்தப்பட்ட காலத்திலிருந்து மூன்றாவது தடவையாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த சதோச திறப்பு விழாவை ஒரு பெரிய விழாவாக கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கு தெரிய வேண்டும் கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பல சதொச நிறுவனங்களை இந்த அரசாங்கம்தான் மூடி இருந்தது . உண்மையிலேயே இதற்கு மாற்று வழியாக கூட்டுறவு சங்கங்கள் ஊடாக பொருட்களை வழங்கும் பொழுது மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச மக்களும் பயனடைவார்கள் என்று நான் நினைக்கின்றேன்.
இது சம்பந்தமாக அமைச்சர் பந்துல குணவர்த்தனவிடம் நான் கூறியிருந்தேன். மக்கள் தொடர்பான விஷயங்களை அவர் முன்னெடுப்பதில் கொஞ்சம் பின்வாங்குவது அறியமுடிகின்றது. இன்று பட்டதாரிகள் சம்பள விடயம் தொடர்பாக பேசப்படுகின்றது உண்மையிலேயே இலங்கையில் இராஜாங்க அமைச்சர்கள் என்று பலபேர் சுற்றிதிரிகிறார்கள். அமைச்சர்களது அபிவிருத்தித் திட்டங்களை நிறுத்தி வைக்குமாறு நிதியமைச்சர் கூறியிருக்கின்றார்.
இந்த இராஜாங்க அமைச்சர்கள் வாகனங்களில் சுற்றி திரிவதை நிறுத்திவிட்டு சம்பளங்களை அரசாங்கத்துக்கு வழங்க வேண்டும் நான் எனது சம்பளத்தை இந்த பட்டதாரிகளுக்கு வழங்க தயாராக இருக்கின்றேன். ஆகவே இது தொடர்பாக மக்கள் சிந்திக்க வேண்டி உள்ளது . அண்மையில் சில முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட ஒரு கடிதம் பாரிய பிரச்சினையாக மாறி இருந்தது. உண்மையிலேயே அது நாடாளுமன்ற உறுப்பினர்களால் கையொப்பம் இடபட்டதா என்ற கேள்வியும் இருக்கின்றது.
இது சம்பந்தமான விளக்கங்கள் கூறப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரினால் அனுப்பப்பட்டதாக கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது இந்த போலியான கடிதத்தை வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தான் ஏற்பாடு செய்த ஒரு ஊடக சந்திப்பில் கூறியிருக்கின்றார்.
இது சம்பந்தமாக கட்சி கூடிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கும் என நான் நம்புகிறேன். உண்மையிலேயே தமிழரசுக் கட்சிக்குள் மட்டக்களப்பு மாவட்டத்தில் என்ன நடக்குது என்பது தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் எனக்கு கூடிய பங்கு இருக்கின்றது. ஆகவே இது தொடர்பான விடயங்களை மிக விரைவில் தலைவர் அறிவிப்பார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.