சுதந்திரமான முறையில் தேர்தல் இடம்பெறுவதை தடுக்கும் வகையில் பாரதூரமான சட்டங்களை இயற்ற அரசாங்கம் முறையற்ற வகையில் செயற்படுகிறது.
சகல எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடி சபாநாயகருக்கு எதிராக வெகுவிரைவில் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (07.02.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாட்டு மக்களின் மீது ஒட்டுமொத்த வரி சுமைகளையும் திணித்து விட்டு பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.
நான்காவது கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டதால் நாடாளுமன்றத்தில் உள்ள 91 குழுக்களில் 64 குழுக்கள் கலைக்கப்பட்டுள்ளன.மீண்டும் புதிதாக குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும்.
ஆகவே ஜனாதிபதியின் செயற்பாடுகளினால் அரச நிதியும்,காலமும் வீண்விரயமாக்கப்பட்டுள்ளது.
அரச நிதி மோசடி குறித்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.ஆகவே ஊழல் மோசடிக்கு ஒத்தாசை வழங்கும் வகையில் ஜனாதிபதி செயற்பட்டுள்ளார்.
நாட்டில் சுதந்திரமான முறையில் தேர்தலை நடத்துவதற்கான சூழலை முடக்கும் வகையில் பாரதூரமான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.
நிகழ்நிலை காப்புச் சட்டத்தினால் நாட்டு மக்களின் பேச்சு உரிமை முடக்கப்பட்டுள்ளது. மறுபுறம் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகரின் செயற்பாடுகள் முறையற்றவை எனவும் இவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
சகல எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடி சபாநாயகருக்கு எதிராக வெகுவிரைவில் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவோம் என்றார்.