சனிக்கிழமை பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த மற்றும் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த கரூர் கூட்ட நெரிசல் குறித்து சுயாதீன விசாரணை கோரி நடிகரும் அரசியல்வாதியுமான விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டப் பிரிவு சென்னை மேல்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நீதிபதி எம். தண்டபாணி முன்னிலையில் எஸ். அறிவழகன் தலைமையிலான சட்டத்தரணிகள், இந்த வழக்கை சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் சுயாதீன விசாரணைக்காக பரிந்துரைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த வழக்கு இன்று (29) பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
அதேநேரம், இந்த சம்பவத்திற்குப் பின்னால் சதி இருப்பதாகக் கூறி, தேசிய மனித உரிமைகள் ஆணையத்திலும் கட்சி முறைப்பாடு அளித்துள்ளது.
முன்னதாக, TVK தலைவரும் நடிகருமான விஜய்யின் சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து, பொலிஸார் பாதுகாப்பு சோதனை நடத்தினர்.
நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு செயலிழக்கும் படையினர் நிறுத்தப்பட்டனர்.
அதே நேரத்தில் உள்ளூர் பொலிஸார் அந்தப் பகுதி காவல் நிலையத்தில் இருந்து குறைந்தது 15 கூடுதல் பணியாளர்களுடன் தற்போதைய பாதுகாப்பு வளையத்தை வலுப்படுத்தினர்.
மிரட்டல் அழைப்பு குறித்து விசாரணை நடந்து வருகிறது.
சட்ட முன்னேற்றங்களுடன், கரூர் பேரணி கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட செந்தில்கண்ணன், பொறுப்புக்கூறல் சரி செய்யப்பட்டு பாதுகாப்பு நெறிமுறைகள் உறுதி செய்யப்படும் வரை விஜய் மற்றும் TVK இன் எந்தவொரு பேரணிக்கும் மாநில காவல்துறை அனுமதி வழங்குவதைத் தடுக்கக் கோரி சென்னை மேல் நீதிமன்றத்தை அணுகினார்.
பொறுப்பற்ற திட்டமிடல், மோசமான மேலாண்மை மற்றும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காதது போன்ற காரணங்களால் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக மனுதாரர் தனது மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
கரூர் நகர காவல்துறை ஏற்கனவே சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளது.
கரூரில் சனிக்கிழமை (27) மாலை நடைபெற்ற TVK இன் பிரச்சார கூட்டத்தின் போது எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அதாவது திமுக மற்றும் அதன் கூட்டணி தலைவர்கள் தவெக தலைவர் விஜய் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர்.
ஆனால் எதிக்கட்சிகளான அதிமுக, பாஜக, கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பல்வேறு விடயங்களை எடுத்துக்கூறி ஆளும் கட்சியின் சதி வேலை என சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.
குறிப்பாக சமூக வலைதளங்களில் விஜய்க்கு ஆதரவாகவே குரல் கொடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.