இந்தியா- தனுஸ்கோடி கடற்கரை வழியாக இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்த இருந்த சுமார் 1350 கிலோ மஞ்சள் மூட்டைகளை மண்டபம் மெரைன் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
தனுஸ்கோடி கடற்கரை வழியாக இலங்கைக்கு உலர்ந்த சமையல் மஞ்சள் மூட்டைகள் கடத்த இருப்பதாக மண்டபம் மெரைன் பொலிஸாருக்கு† இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
குறித்த தகவலுக்கமைய நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை, வேதாளை கடற்கரை பகுதியில் தீவிர ரோந்து பணியில் பொலிஸார் ஈடுபட்டனர்.
இதன்போது வேதாளை மீன் பிடி துறைமுகம் கடலில் பதிவு எண் இல்லாத சந்தேகத்திற்கு இடமான முறையில் நாட்டு படகு ஒன்று நிற்பதை அவதானித்த பொலிஸார், அதனை நோக்கிச் சென்றுள்ளனர்.
அப்போது பொலிஸ் வருவதனை அவதானித்த படகில் இருந்த சந்தேகநபர்கள், கடலில் குதித்து தப்பி ஓடியுள்ளனர்.
அதன்பின்னர் குறித்த நாட்டு படகினை பொலிஸார் சோதனை செய்தபோது இலங்கைக்கு கடத்துவதற்காக மூட்டை மூட்டையாக இருந்த சமையல் மஞ்சளை பறிமுதல் செய்த பொலிஸார், மண்டபம் மெரைன் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுச் சென்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் மஞ்சள் மூட்டைகளையும் நாட்டு படகையும் மெரைன் பொலிஸார், மண்டபம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில் தப்பியோடிய சந்தேகநபர்களை தேடும் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.