நாட்டின் தேசிய தலைவர்கள் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் வென்றெடுத்த சுதந்திரத்தை இப்போது முழுமையாக அனுபவிக்கக்கூடிய நிலையில் நாம் இருக்கின்றோமா ? இன்றளவிலே எமது நாட்டில் பெரும்பாலான மக்கள் பொருளாதார ரீதியான சுதந்திரத்தை இழந்திருக்கின்றார்கள்.
எனவே எமது தேசிய தலைவர்கள் போராடிப்பெற்றுக்கொண்ட சுதந்திரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் அதனை முழுமையாக அனுபவிப்பதற்கும் நாம் அனைவரும் ஒன்றுபடவேண்டும் என்று எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ அறைகூவல் விடுத்துள்ளார்.
கொள்ளுப்பிட்டி பொல்வத்தை ஸ்ரீ தர்மகீர்த்தியராமயவிற்கு நேற்று வெள்ளிக்கிழமை விஜயம்செய்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ, விகாரையின் பிரதம தேரர் ஸ்ரீலங்கா ராமன்ய மஹாநிகாய பீடாதிபதி அக்கமஹாபண்டித திரிபிடக மகுலேவே ஸ்ரீ விமலாபிநந்தன தேரரின் வழிகாட்டலின்கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 74 ஆவது சுதந்திரதின நிகழ்வில் கலந்துகொண்டார்.
அதனைத்தொடர்ந்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது ; ஏகாதிபத்தியவாதத்திடமிருந்து நாட்டைமீட்டு சுதந்திரத்தை வென்றெடுப்பதற்காகவும் பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்காகவும் போராடிய அனைவரையும் 74 ஆவது சுதந்திரதினநாளில் நினைவுகூருகின்றோம். சுயாதீனத்துவம், இறையாண்மை என்பவற்றைப் பாதுகாத்துக்கொண்டு நாம் நாடு என்ற ரீதியில் முன்நோக்கிப் பயணிக்கவேண்டிய நிலையிலிருக்கின்றோம்.
எமது நாடு கடந்த காலங்களில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கின்றது. இன்றளவிலே மனசாட்சியின் பிரகாரம் நாம் கேட்கவேண்டிய பல கேள்விகள் இருக்கின்றன. நாட்டின் தேசிய தலைவர்கள் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் வென்றெடுத்த சுதந்திரத்தை இப்போது முழுமையாக அனுபவிக்கக்கூடிய நிலையில் நாம் இருக்கின்றோமா? இன்றளவிலே வறுமையின்றி வாழ்வதற்கான சுதந்திரத்தை இழந்திருக்கின்றார்கள்.
கல்வி, சுகாதாரம் உள்ளடங்கலாக அனைத்துத்துறைகளிலும் பொருளாதார ரீதியில் மக்கள் இழந்திருக்கும் சுதந்திரம் தொடர்பில் நாம் அவதானம் செலுத்தவேண்டும். எமது நாடு பலரதும் நன்மதிப்பைப்பெற்ற சிறந்ததொரு நாடாகும்.
இருப்பினும் நாட்டின் நன்மதிப்பிற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு சம்பவங்கள் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. அத்தியாவசியப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு அவசியமான டொலருக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கின்றது. நாட்டின் பெறுமதிவாய்ந்த தேசிய சொத்துக்கள் வெளிநாடுகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
இவ்வாறு எமது தேசிய தலைவர்கள் போராடிப்பெற்றுக்கொண்ட சுதந்திரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் அதனை முழுமையாக அனுபவிப்பதற்கும் நாமனைவரும் ஒன்றுபடவேண்டும். தற்போது படுகுழியில் வீழ்ந்திருக்கும் நாட்டை மீட்டெடுப்பதற்கு ஒன்றிணைந்து போராடவேண்டும் என்று அவர் மேலும் வலியறுத்தினார்