கோப் குழுவிற்கு முன்மொழியப்பட்ட கலாநிதி ஹர்ஷ டி சில்வா தன் சுய விருப்பின் பேரில் இராஜினாமா செய்தமையால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பேராசிரியர் சரித ஹேரத்தின் பெயரை முன்மொழிவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைவர்கள் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்குமாறு தாம் பல தடவைகள் பகிரங்கமாக கோரிக்கை விடுத்ததை நினைவுகூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்,அதற்கு சபாநாயகரும் இணங்கியதாக சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய ஜனாதிபதியும் அன்று பிரதமராக இருந்த போது இதே கருத்தைக் கொண்டிருந்தார் என்றும் அந்நிலைப்பாடு இன்று மாறியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இதேவேளை, இருபத்தி இரண்டாவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கான பிரேரணை வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமா என வினவிய எதிர்க்கட்சித் தலைவர், அவ்வாறு சமர்ப்பிக்கப்படவில்லையென்றால், ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட இருபத்தியோராம் திருத்தப் பிரேரணையை பாராளுமன்றத்திற்குக் கொண்டு வருமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.