சர்வ கட்சி அரசாங்கத்தில் புதிய ஜனாதிபதியாக சஜித் பிரேமதாஸவும், பிரதமராக அனுர குமார திஸநாயக்கவும் நியமிக்கப்பட வேண்டும் என்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க மற்றும் அகில இலங்கை மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் விசேட அதியுயர் பீட கூட்டம் கல்முனையில் உள்ள தலைமை செயலகத்தில் இன்று (14) நடைபெற்றுள்ளது.
இதை தொடர்ந்து, நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
”இன்று இலங்கை வரலாற்றில் மிக பொன்னான நாள். மக்கள் போராட்டம் வெற்றி பெற்ற மகத்தான தினம். மக்கள் போராட்டத்தின் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரட்டி அடிக்கப்பட்டுள்ளார்.இதனை தொடர்ந்து, புதிய ஜனாதிபதி மற்றும் புதிய பிரதமர் நியமிக்கப்பட வேண்டும்.
நாம் அடையாளம் கண்ட வகையில் சஜித் பிரேமதாஸவும் அனுரகுமார திஸாநாயக்கவுமே இந்த நாட்டை தலைமை ஏற்று நடத்துவதற்கு பொருத்தமானவர்கள்.
சஜித் ஜனாதிபதியாகவும், அனுர பிரதமராகவும் நியமிக்கப்பட வேண்டும் என்று நாம் முன்மொழிகின்றோம். மேலும், ரணில் விக்ரமசிங்க உடனடியாக பிரதமர் பதவியில் இருந்து விலகி வழி விட வேண்டும்.இந்த அரசாங்கத்தை தீர்மானிக்கின்ற சக்திகளாக போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் இயங்க வேண்டும். அதே போல், வடக்கு கிழக்கிலும் இவ்வாறான மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
வடகிழக்கு மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்ற குறுகிய சுய இலாப தலைமைகள் விரட்டியடிக்கப்பட வேண்டும். விக்னேஸ்வரனும் ஒன்றுதான், சம்பந்தரும் ஒன்றுதான். எமது மக்கள் புதிய தலைமையின் கீழ் பயணிக்க வேண்டும்” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.